கதைகள்

“நடுகைக்காரி -78″… ஏலையா க.முருகதாசன்

ஒரு தவறு நடக்கும் போது அங்கே நியாயம் கேட்கப்படும் சூழ்நிலை ஏற்படுமாயின் மனமும் உடலும் ஒன்றுக்கொன்று போட்டீ போட்டுக் கொண்டு சமாந்தரமாக இயங்கும்.
ஞானம் ஜிஎம்மின் அறையை நோக்கி வேகமாக இரண்டு படிக்கொன்றாக காலை எடுத்து வைத்துப் போகையில் அவனுக்கு ஈடுகொடுத்து பார்வதியும் அவனருகாகப் போய்க் கொண்டிருந்தாள்.

கோபத்தாலும்,கவலையாலும்,அவமானத்தாலும் அவளின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன,பார்வதியின் மூக்கும் கன்னங்களும்கூட கோபத்தினால் சிவந்திருந்தன.
பெண்களுக்கு நாணத்தாலும் மூக்கும் கன்னங்களும் சிவப்பதுண்டு,அது போல அவர்களின் சுயமரியாதைக்கு அவமானம் ஏற்பட்டால் உண்டு இல்லை என்பதான கோபத்தாலும் முகம் கனன்று சிவப்பதுண்டு.

பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் அவளின் சுயமரியாதையை சிலம்பரசி சீண்டிவிட்ட கோபம்.
ஞானம் இரண்டு இரண்டு படியாக நடக்க பார்வதியும் அவனுக்கு ஈடுகுடுத்து நடந்து கொண்டிருந்தாள்.பார்வதி தலைக்கு சன்சில்க் சம்பூவும் உடலுக்கு டே அண்ட் நைட் சவர்க்காரமும் போட்டுத் தோய்ந்திருக்வேண்டும்.

அவள் தனது தலைமயிரை கூட்டிச் சிவப்பு நிறபோல்ஸ் உள்ள றப்பர் பாண்டால் கட்டியிருந்தால்.

அவளின் முன்நெற்றித்தலைமயிர்கள் நெற்றியில் வந்துவிழ அவற்றை எடுத்து மேலே எடுத்துவிட்டபடி ஞானத்துடன் படியேறி வந்தவளின் உடலிலிருந்துடே அண்ட் நைட்; சவர்க்காரத்தின் வாசம் வந்து கொண்டிருந்தது.

டே அண்ட் நைட் சவர்க்காரத்தின் தரம் எப்படியென்றால் காலையில் அதைப் போட்டு எவ்வளவுதான் குளித்தாலும் அதன் வாசம் மாலை வரை குளிப்பவரின் உடலிலிருந்து வரும்.இளம் பெண்களும் இளைஞர்களும் அந்தச் சவர்க்காரத்தில் ஒரு மோகமே கொண்டிருந்தனர்.

பார்வதியின் தலைமயிரிலிருந்து வந்த சன்சில்க் சம்பூவின் வாசனையும் அவளின் உடலிலிருந்து வந்த சவர்க்கார வாசனையும் ஞானத்தின் நாசியை நிறைக்க அவன் வேகமாக படியேறிக்கோண்டே அவள் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறான் அவளும் ஏதேச்சையாக அவனைப் பார்க்கிறாள்.

பார்வதியின் கன்னங்களும் மூக்கும் சிவந்திருப்பதைக் கண்ட ஞானம் உங்களுக்குள்ளை கோபம் கொதிச்சுக் கொண்டிருப்பதை முகம் காட்டுகிறது என்கிறான்.
பார்வதி அதற்கு எந்த பதிலுமே சொல்லாமல் மாடிப் படியேறிக் கொண்டிருக்கிறாள்.மாடிப்படிகளில் யாரோ ஏறிவருவதற்கான காலடிச் சத்தம் கேட்கவே இருவரும் திரும்பிப் பார்க்கின்றனர் இருபது மாடிப்படிகளுக்குக் கீழே சிலம்பரசியும் படியேறி வருவதைப் பார்க்கிறார்கள்.

துணிக்கடையிலிருந்து ஞானம் பார்வதியைக் கூட்டிக் கொண்டு போனதைக் கண்ட புஸ்பா மெதுவாக மங்களேஸ்வரிக்கருகில் வந்து துணி விக்கிறவுக்கும் அந்தப் பொட்டைக்குந்தானே பிரச்சினை அவள் தனியப் போய் ஜி.எம்மைச் சந்திச்சு தன்னுடைய பிரச்சினையைச் சொல்ல வேண்டியதுதானே எதுக்கு அவளைக் கூட்டிக் கொண்டு ஞானம் போக வேணும் இவர் என்ன அவளின்ரை லோயரா இல்லாட்டி அவள் என்ன இவரின் லவ்வரா என்று சொன்ன புஸ்பாவை நெற்றியைச் சுருக்கி கேள்வித் தோரணையில் பார்த்த மங்களேஸ்வரி உனக்கு இப்ப என்ன பிரச்சினை அந்தப் பிள்ளைக்கு நியாயம் கேட்க ஒருத்தன் போயிருக்கிறான்,ஏன் ஞானம் அவளோடை போயிடுவான் என்று பயமோ என்று கேட்டவளை வெறுப்பேற்றுகிறங மாதிரி சொல்லக்கூடாத வார்த்தையைச் சொல்லிப் போட்டு நல்ல பிள்ளை மாதிரி போச்சுதே துணி வித்துக் கொண்டிருக்கிற அந்த பொம்பிளையாலைதான் இப்ப இப்படி ஒரு பிரச்சினை வந்திருக்கு,நிச்சயமாக அவாவுக்கு வார்னிங் கடிதம் குடுப்பினம் இல்லாட்டில் இன்ரடிக்ட்தான் நான் கேள்விப்பட்டனான் சங்கத் தலைவரும் ஜிஎம்மும் ஸ்றிக்கானவர்கள் என்று புஸ்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே புஸ்பாவுக்கும் மங்களேஸ்வரிக்கும் அருகில் வந்த நீலா யார் அந்தப் பொம்பிளை சரியான வாய்க்காரி போல என்றவள் ஞானத்தோடை போற பொட்டை பொது நிறமெண்டாலும் நல்ல ஸ்மாட்டான பெட்டைதான் என கடைக்கண்ணால் புஸ்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னவள் மங்களேஸ்வரியிடம் பிரச்சினைப்பட்ட அந்தப் பொம்பிளையைத் தெரியுமோ என்று கேட்க என்ன பதில் சொல்வது என்று தடுமாறிய மங்களேஸ்வரி சிலம்பரசி தனது தமையன் முருகதாசனின் மனைவி என்பதை மறைத்து வேகமாக எனக்கு ஆரென்று தெரியாது என்று சொல்கிறாள்.

என்னதான் இருந்தாலும் ஒரு பொதுக்கடைக்கு மலிவென்றால் காகக் கூட்டம் குளிக்காமல் வந்திடுங்கள் என்று அந்தப் பொம்பிளை சொன்னது பெரிய பிழைதான் என்று நீலாவின் அக்கா சொல்வதைக் கேட்டுவிடுகிறாள் மங்களேஸ்வரியின் தாய்.

ஏற்கனவே சிலம்பரசி எடுத்தெறிஞ்சு பேசுகிறவள் திமிர் பிடிச்சவள் இவளையா உன்ரை மோன் விரும்புகிறான் என மங்களேஸ்வரியின் தாய்க்கு அயலட்டைச் சனங்களும் ஊருக்குள்ளை தெருவிலும் ஒழுங்கையிலும் போகிற வவர்கள் வருகிறவர்கள் மறிச்சுசச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்தப் பொட்டையின் தாய்க்காரியின் வாயைத் தெரியுந்தானே,அவையின்ரை வீட்டுக் கோழி சும்மா வேலியிலை ஏறி கொக்கரிச்சாலே தன்ரை கோழி அடுத்த வீட்டுப் பட்டையிலை போய் முட்டையிட்டிட்டு வந்திட்டுது என்று கோழியையும் பேச,p கோழிக்கு வசியம் போட்டு வைச்சிருக்கிறாளவை என்று சத்தம் போடுகிறவள் தாய்க்காரி,இண்டைக்கு கதை கேட்டாள் நாளைக்கு பதில் சொல்லுறவை நீங்கள் எப்படித்தான் இரண்டு பகுதிக்கும் ஒத்துப் போகப் போகுதே தெரியாது என்று ஒரு பெருமூச்சை விட்டிட்டு மங்களேஸ்வரியின் தாய்க்கு புத்தி சொல்லுகிறவை உண்டு,புத்தி சொல்லுறம் எண்டு மூட்டிவிடுறவையும் உண்டு.

புஸ்பாவின் தாய், துணி வாங்கிப் போட்டந்தானே வா வீட்டை போவம் என்று புஸ்பாவிடம் கேட்க,ஞானம் வரும்வரை அதை இதைச் சொல்லிச் சமாளி;ச்சுக் கடையிலை நிற்க வேண்டும் என்பதற்காக அம்மா வாங்கின துணிக்கு காசு குடுத்தாச்சுத்தானே இங்கை ஒரே வெக்கையாயிருக்குது வெளியிலை நிற்பம் சனம் குறையட்டும் சனம் குறைஞ்சதற்குப் பிறகு வேறை நல்ல துணி ஏதாவது பார்த்து வாங்குவம் என்று தாயையும் கூட்டிக் கொண்டு வந்தவள் மங்களேஸ்வரியும் தாயும் கடைக்கு வெளியில் நிற்பதைக் கண்டதும் அவர்களுக்கருகில் வருகிறார்கள்.

நீலாவும் தமக்கையும் வாங்கியது போதும் என்பது போல கடையைவிட்டு வெளியே வந்தவர்கள் மங்களேஸ்வரியும் தாயும் புஸ்பாவும் தாயும் நிற்கும் இடத்திற்கு வந்து புஸ்பாவைக் கடைக்கண்ணால் நக்கலாக ஒரு பார்வை பார்த்து அவர் அந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போனதைப் பார்த்தாள் பெண்சாதியைக் கூட்டிக் கொண்டு போன மாதிரி இருந்துது,கடைசிலை அதுதான் நடக்குதோ தெரியாது அது நல்ல இடந்தானே எனக் கண்ணைச் சிமிட்டி மங்களேஸ்வரிக்கு மட்டும் கேட்கிற மாதிரிச் சொல்கிறேன் என நினைச்சு நீலா சொன்னதைக் காதைக் கூர்மையாக்கி புஸ்பாவும் கேட்டு விடுகிறாள்.
நீலாவின் தமக்கை வரச் சொல்லி தங்கச்சியாரை ஆக்கினைப்படுத்த தமக்கையுடன் நீலா போய்விடுகிறாள்.

ஞானம் பார்வதியை கூட்டிக் கொண்டு போனதைப் பிடிக்காத புஸ்பா அந்தத் துணி வித்த பொம்பிளையின்ரை வாயைப் பார்த்தியளே.அவளைக் கல்யாணம் செய்கிறவன் பாடு அதே பாடுதான் என்று மங்களேஸ்வரிக்கும் தாய்க்கும் சொல்கிறாள்.

தன்னுடைய தமையன்தான் சிலம்பரசியைக் கல்யாணம் செய்தவன் என்பதை மங்களேஸ்வரியால் புஸ்பாவுக்கும் தாய்க்கும் சொல்ல முடியவில்லை.புஸ்பா சொன்ன வார்த்தை மங்களேஸ்வரியின் தாயின் மனசைச் சுருக்கென்று தைச்சாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தாய் பேசாமல் நிற்கிறாள் மோள்காரி ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறாள் என முகத்தைத் திருப்பினாலும் தாயின் முகம் கறுத்ததை மங்களேஸ்வரி கவனிச்சுவிட்டாள்.
முகத்தைத் திருப்பிக் கொண்டவள் கண்களிலிருந்து வந்த கண்ணீரைத் தூசியைத் துடைப்பது போல துடைக்கிறாள்.

இரண்டு மூன்று விநாடிகள் அந்த நால்வரும் எதுவுமே பேசாது நின்றனர்.
வாங்கம்மா கண்ரீனிலை போய் ரீ குடிப்பம் என்று புஸ்பா தாயிடம் கேட்டவள் நீங்களும் வாருங்கோ ரீ குடிப்பம் என்று கேட்க,தாங்ஸ் புஸ்பா நானும் அம்மாவும் குடிச்சிட்டம் என்று மங்களேஸ்வரி சொல்ல, அப்ப எங்களை விட்டிட்டு குடிச்சிருக்கிறியள் என்று சிரிச்சுக் கொண்டே சொல்லியபடி தாயைக் கூட்டிக் கொண்டு புஸ்பா கண்ரீனுக்குள் நுழைகிறாள்.
இவ்வளவு நேரமும் அடக்கி வைச்சிருந்த வேதனையும் கோபமும் மங்களேஸ்வரியின் தாயிடமிருந்து வெளிக்கிடுகிறது.

என்னதான் அவள் பிழை விட்டாலும் அவள் என்னுடைய மருமோள்.அவளைப் பற்றி மற்றவை கதைக்கிறதை என்னாலை பொறுக்க முடியவில்லை.நான் கொண்ணைக்கு சொல்லாத நாளில்லை அந்த வாய்க்காற குடும்பகத்துக்குள்ளை போகாதை என்று அவன் கேட்டானா.
கொண்ணியைக் குறை சொல்ற வார்த்தை ஒவ்வொன்றும் எங்களுக்கும் சுடுது.என்ரை மருமோள் நல்லவள்தான் ஆனால் நேர காலந் தெரியாமல் எடுத்தெறிஞ்சு பேசி மற்றவையிட்டை கெட்ட பெயர் வாங்கிறாள்.

தாயைப் போல உன்ரை கொண்ணிக்கும் அவசரப்பட்ட வாய்தான் அவளைப் பழுதாக்குது என்று மகளுக்குச் சொல்லி வேதனைப்படுகிறாள் மங்களேஸ்வரியின் தாய்.

சிலம்பரசியின் தாய்க்கு தனது மருமகள் கம்பீரமான உயரமான நல்ல முகவெட்டுள்ள அழகான பெண் என்பதில் பெருமை உண்டு.ஆனால் அவளின்ரை வாய்தான் கூடாது என்பது அவளின் அபிப்பிராயம்

சிலம்பரசி தனது அண்ணி என்பது மங்களேஸ்வரியின் வகுப்பில் யாருக்குமே தெரியாது.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.