மல்லிகை ஜீவா நினைவுதினம் – ஜனவரி 28 … முருகபூபதி

இலங்கையில் பதவியிலிருக்கும் புதிய அரசாங்கமாவது
ஜீவாவுக்கு நினைவு முத்திரை வெளியிடுமா…?
யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 ஆவது வயதில் மறைந்தார்.
ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டு முதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்க முடியும்.
டொமினிக் என்பது அவரது இயற்பெயர்.
தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம் பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக், தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.
மல்லிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு அதனை வெளியிடத்தொடங்கியதும், மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார். அவரது இந்த நாமம்
இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது. தமது இலக்கிய வாழ்வில் வெள்ளிவிழா, மணிவிழா, பவளவிழா, அமுத விழா கண்டிருக்கும் ஜீவா, இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூற்றாண்டு விழாவும் கண்டிருப்பார்
ஜீவா, மல்லிகையின் ஊடாக ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இலங்கையில் மூவின
இலக்கியவாதிகளினாலும் ஆழமாக நேசிக்கப்பட்டவர். சிறுகதை இலக்கியத்திற்காக ( தண்ணீரும் கண்ணீரும் – கதைத் தொகுப்பு ) இலங்கையில் முதல் முதலில் தேசிய சாகித்திய விருது பெற்றவரான ஜீவா, பின்னாளில் சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் முதலான உயரிய விருதுகளும், கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதும் பெற்றவர்.
மகாகவி பாரதி மறைந்து சுடுகாடு செல்லும்போது விரல்விட்டு எண்ணத்தக்கதாக ஒரு சிலர்தான் உடன் வந்தனர். கொரோனோ பெருந்தொற்று காலத்தில், ஜீவா – கொழும்பில் மின்மயானத்தில் தகனமாகும்போது ஒரே ஒரு ஜீவன்தான் அவரது பூதவுடல் தாங்கிய பேழையை பார்த்துக்கொண்டு நின்றது. அந்த ஜீவன், ஜீவாவின் ஏக புதல்வன் திலீபன்.
மல்லிகை ஜீவா எம்மத்தியில் நினைவுகளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார். மல்லிகை ஜீவா மறைந்தபின்னர், அவரது மல்லிகை காலத்தில் 1970 இற்குப்பின்னர், அவரால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கிலங்கையைச் சேர்ந்த கவிஞர் மேமன்கவி, மற்றும் முருகபூபதி ஆகியோர் இரண்டு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
கொழும்பில் வதியும் மேமன்கவி, டொமினிக் ஜீவாவும் நானும் என்ற நூலை வெளியிட்டுள்ளார். தனக்கும் ஜீவாவுக்குமிடையே நீடித்திருந்த இலக்கிய நட்புறவை இதில் விரிவாக அவர் பதிவுசெய்துள்ளார்.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் நான், வாழும் வரலாறு மல்லிகை ஜீவா என்ற நூலை மின்னூலாக வெளியிட்டுள்ளேன். ஜீவாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மூவின இலக்கியவாதிகளால் ஜீவா பெரிதும் மதிக்கப்பட்டவர். இன நல்லிணக்கத்திற்காக மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தமது மல்லிகை இதழில் முன்னுரிமை வழங்கியவர்.
நூற்றுக்கணக்கான மூவின கலை, இலக்கிய ஆளுமைகள், சமூகப்பணியாளர்கள் மற்றும் இலக்கிய பேராசிரியர்களின் படங்களை மல்லிகை இதழ்களின் முகப்பில் பதிவுசெய்து பாராட்டி கௌரவித்து மல்லிகை இதழிலே அவர்கள் பற்றிய கருத்துச்செறிவு மிக்க ஆக்கங்களையும் வெளிவரச்செய்தவர்.
இலங்கையின் அனைத்து பிரதேச எழுத்தாளர்களுக்கும் மல்லிகையில் சிறந்த களம்
வழங்கியவர்.
அத்துடன் மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களினால் இலக்கிய ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
மல்லிகை ஜீவாவின் சிறுகதைகள் சிங்கள – ஆங்கில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
அவருடைய சுயசரிதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதுடன், சில கதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.
மல்லிகை இதழ்கள் பல்கலைக்கழக கலைப்பீட தமிழ்த்துறை மாணவர்களுக்கு உசாத்துணையாகவும் விளங்கியவை.
கொழும்பில் புறநகரத்தில் மட்டக்குளிய பிரதேசத்தில் காக்கை தீவில் ஏக புதல்வன் திலீபனின் பராமரிப்பில் அந்திமகாலத்தில் வாழ்ந்த மல்லிகை ஜீவா, கொரோனோ தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மாலை பொரளை கனத்தை மின் மயானத்தில் அன்றைய சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் அவரது இறுதிச்சடங்கு அமைதியான முறையில் மகன் திலீபன் முன்னிலையில் நடைபெற்றது.
1966 ஆம் ஆண்டு மல்லிகை மாத இதழை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் வெளியிட்டு வந்த ஜீவா, வடபகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்த பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து மல்லிகையை வெளியிட்டவாறு, மல்லிகைப்பந்தல் என்ற பதிப்பகத்தையும் உருவாக்கி பல நூல்களையும் வெளியிட்டார்.
தான் இறக்கநேரிட்டால், தமது உடல் தமது பெற்றோர்கள் நல்லடக்கமான யாழ். மண்ணிலேயே அடக்கப்படவேண்டும் என்ற விருப்பத்துடனும் இருந்தார் என்று அவரது மகன் திலீபன், சொல்லியிருந்தார்.
தந்தையின் அஸ்தி, யாழ்ப்பாணத்தில் தந்தையின் விருப்பத்தின் பிரகாரம் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஜீவா மறைந்த பின்னர் உலகில் பல நாடுகளிலும் அவரை நினைவுகூர்ந்து நிகழ்வுகள் மண்டபங்களிலும் மெய்நிகர் ஊடாகவும் நடந்தன.
“ சிங்கள இலக்கிய மேதை மூத்த எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மற்றும் அறிஞர் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை, ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர், கலாயோகி ஆனந்தகுமாரசாமி ஆகியோருக்கெல்லாம் இலங்கை அரசு முன்னர் நினைவு முத்திரை வெளியிட்டிருப்பதுபோன்று, எங்கள் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கும் இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும். “ என்று அவுஸ்திரேலியிவிலிருந்து நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
யாழ்ப்பாண மண்ணில் பிறந்து, உலகலாவிய ரீதியில் ஈழத்து இலக்கியத்திற்கு பெருமை
சேர்த்த மல்லிகை ஜீவாவுக்கு யாழ். மாநகர சபையிலும் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்ததா? என்பது தெரியவில்லை. !?
“ முதல் முதலில் மல்லிகை ஜீவா தேசிய சாகித்திய விருது பெற்று யாழ்ப்பாணம் திரும்பியவேளையில் அன்றைய யாழ். மாநகர மேயர் துரைராஜா ஜீவாவுக்கு மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துவந்தார் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்.
யாழ்நகரத்தில், மாநகர சபை அல்லது வடமாகாண சபை ஜீவாவுக்கு நினைவு மண்டபமும் அமைக்கவேண்டும். அதில் ஜீவாவின் மல்லிகை இதழ்கள், ஜீவாவின் இலக்கிய படைப்புகள், ஒளிப்படங்கள், ஜீவா பெற்ற உயர் விருதுகள் இடம்பெறத்தக்கதாக காட்சியகமும் நிறுவப்படல்வேண்டும்.
இதுவிடயத்தில் இலங்கை தமிழ் அமைச்சர்கள், தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தமிழ் – சிங்கள – முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களும் , இலங்கையில் வெளியாகும் ஊடகங்களும் தமிழ் சிற்றிதழ்களும் ஏகமனதாக இலங்கை அரசுக்கும் வலியுறுத்த வேண்டும்.
ஜீவா இடதுசாரி சிந்தனைகளுடன் வளர்ந்தவர். முற்போக்கு இலக்கிய
வளர்ச்சிக்கு தமது மல்லிகை இதழின் ஊடாக சிறந்த பணியாற்றியவர்.
பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் கலாசார அமைச்சு இதுவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
ஜீவா மறைந்த பின்னர், 2021 இறுதியில் ( 19-12-2021 ) அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற நினைவரங்கில் ஜீவாவின் வாழ்வும் பணிகளும் குறித்து எழுத்தாளர் நொயல் நடேசன் உரையாற்றினார். அன்றைய தினம் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கர் அவர்களுக்கு ஜீவா நினைவு விருது வழங்கப்பட்டது. இச்செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றோம்.
letchumananm@gmail.com
![]()