உள்நாட்டிலும் ,வெளிநாடுகளிலும் மகிந்த, கோத்தாவுக்கு எதிரிகள்
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இன்றும் சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் எதிரிகள் உள்ளனர் . எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என பொதுஜனபெரமுனவின் முன்னாள் எம்.பி.யான குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எமக்கு எவ்வித தனிப்பட்ட சலுகைகளும் கிடைக்கவில்லை. ஆனால் உயிர் வாழும் உரிமையை அவர் தான் உறுதிப்படுத்தினார் . அந்த நன்றிக்காகவே தற்போது பேசுகின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையில் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானவை ஜனாதிபதி அநுர இவ்வாறு கீழ் நிலைக்கு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னரும் நாங்கள் அமைதியாக இருந்தால் நாங்களும் நன்றியில்லாதவர்களாக மாறிவிடுவோம்.
ஜனாதிபதி தனது உரையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர்.அமைதியாக இருக்க வேண்டும். இல்லாதுவிட்டால் அதுவும் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.இது முற்றிலும் தவறான கருத்து. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் தேர்தல் பிரசார மேடைகளில் பேசியதை போன்று தற்போதும் பேசுகிறார். ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்துக்கு அமைய அவர் செயற்பட வேண்டியது அவசியம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை பாதுகாத்தார். எமது உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தினார். யுத்த கால சூழல் எவ்வாறு இருந்தது என்பதை எவராலும் மறந்துவிட முடியாது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இன்றும் சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் எதிரிகள் உள்ளனர் . எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் குறை பாடுகள் காணப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
![]()