கட்டுரைகள்

பவளத்திட்டில் பழந்தமிழர் கறி!… தொடர் – 3 …. சங்கர சுப்பிரமணியன்.

இவ்வாறு மூன்று வழிகளில் பவளத்திட்டை பார்வையிட்டாலும் கடலில் ஸ்நார்கல் என்ற சாதனத்தின் உதவியுடன் நீந்திச் சென்று பார்வையிடுவது என்பது மிகவும் நன்றாக இருக்கும். இதற்குரிய உடை, காலில் மாட்டக் கூடிய துடுப்புகள் போன்றவற்றுடன் ஓரளவு பயிறசியிருந்தால் அந்த அனுபவமே தனி. என்னுடன் பயணித்த எனது தம்பி இதில் சாதனை படைத்தார்.

கடலில் நீந்திச் சென்று பவளத் திட்டை பார்வையிட விரும்புவர்களுக்கு பெரிய சோதனை காத்திருந்தது. நீந்தும்போது உடலில் அணியக் கூடிய உடுப்புக்களும் தண்ணீரில் மூழ்காமல் இருக்க மார்பில் அணியக்கூடிய பாதுகாப்புக் கவசங்களும் பல அளவுகளில் குவிந்து கிடக்கின்றன.

இவை பலர் பலமுறை பயன்படுத்தியவை. அதை பயன்படுத்துபவர்களே நீரில் சுத்தம் செய்து அங்கே போடவேண்டும். ஆதலால் எல்லா உடைகளுமே ஈரமாக தண்ணீர் சொட்டிக் கொண்டுதான் இருக்கும். இந்த ஈரமான ஈர உடைகளை உங்கள் அளவுக்கு தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சோதனைகளை சாதனையாக்க சில தடவைகளாவது முயற்சி செய்ய வேண்டும்.

ஆதலால் இந்த தேடும் முயற்சி வாழ்க்கையானது மலர்களாலான படுக்கையல்ல என்பதை நினைவூட்டும். ஒரு சிலருக்கு வேண்டுமானால் தேட் இஸ் மை கப் ஆப் டீயாக பிள்ளையார் பெற்றோரைச் சுற்றி வந்து மாங்கனி பெற்றது போல் எளிதாக அமையலாம். என் பெயர் சுப்பிரமணியன் என்று இருப்பதாலோ என்னவோ முருகன் மயிலில் ஏறிச் சுற்றிவந்ததுபோல் நெடுநேரமானது.

உடை மாற்றுவதிலேயே எனது ஆற்றலில் பாதியை இழந்தேன். மேலும் இந்த் உடை, கவசம்,

துடுப்புகள், மற்றும் மூச்சுக் கருவிகளிடன் கடலில் இறங்கியது விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்து செல்வது போல் வேதாளமாய் என்னை அழுத்தவே ஒலிம்பிக் கோல்டு மெடலுக்கா நீத்துகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

மனம் ஒரு குரங்கென்பதை என் மனம் எனக்கு ஒரு தடவையல்ல பல தடவை நினைவூட்டிக் கொண்டிருந்தது. அது என்ன என்கிறீர்களா? “ஒரு மூனு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி” என்று விஜயகாந்த் அம்மன் கோயில் கிழக்காலே என்ற படத்தில் பாடிய பாடல்தான் அது.

மூச்சுக் குழலால (snorkel) அமைதிய தொலச்சேன் நான் கேளு கேளு தம்பி என்று
எண்ணலானேன். இந்த மூச்சுக்குழலில்தான் சுகாதாரம் அடங்கியுள்ளது. இந்த மூச்சுக்குழாயின் ஒரு பகுதி முகத்தில் மாட்டியிருக்கும் கண்ணாடியோடு( goggle) இணைந்திருக்கும்.

மறு பகுதியை வாய்க்குள் நுழைத்து அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் தட்டையான பகுதியை பற்களுக்கு இடையில் பிடித்து கடித்துக்கொள்வேண்டும். அதன்பின் நீர் மட்டத்துக்கு வெளியே தெரியும் மூச்சுக் குழாய் வழியாக மூச்சுக்காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

வாய் மூலமாகவோ அல்லது மூக்கு மூலமாகவோ மூச்சுக்காற்றை வெளியிட வேண்டும். ஆனால் பற்களுக்கிடையே கடித்திருக்கும் பிடியை விட்டு விடக்கூடாது.
இதில் உனக்கென்ன வந்தது? நீ இதில் எங்க அமைதிய தொலைத்தாய் என்ற மாடசாமி அண்ணாச்சியின் மைன்ட்வாய்ஸ் எனக்கு கேட்கிறது.

இப்போது அவருக்கான பதிலைச் சொல்கிறேன். இந்த மூச்சுக்குழாயை பலர் பயன்படுத்தியிருப்பார்கள். அவர்கள் வாயில் பற்களுக்கிடையே கடித்து பயன்படுத்தியதே அவை. ஒவ்வொருவரும் பயன்படுத்தியபின் சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போடுகிறார்கள். அந்த தொட்டியில் இருக்கும் நீரில் கண்டிப்பாக நோய்க்கொல்லிகளை கலந்திருப்பார்கள்.

இதுபோல் பயன்படுத்தப்பட்ட மூச்சுக்குழாய் போடப்பட்ட தொட்டியிலிருந்து எடுத்து அதை திரும்பவும் பயன்படுத்த இன்னொரு தொட்டியில் போடுவார்கள். இவற்றைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும். என்னதான் நோய்க்கொல்லிகளால் அலசப்பட்டு வந்தாலும் சுத்தமாக வந்தாலும் என் மனது அதை ஏற்கவில்லை. அதனால் வெகுநேரம் நீந்தவில்லை.

இந்த கதையை நண்பன் ஒருவனிடம் சொன்னபோது அவன் சொன்ன பதில் ஆமால்ல என்று ஒரு நொடி சம்மதிக்க வைத்தாலும் மறுநொடியில் திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

சரி அவன் சொன்ன பதிலையும் உங்களிடம் சொல்லிவிடுகிறேன். ஏன்டா உனக்கு ஒருவேளை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தால் பல நோயாளிகள் படுத்து எழுந்த படுக்கையில்தானே உன்னையும் படுக்க வைப்பார்கள். அல்லது புதுப் படுக்கை ஒன்று கையோடு எடுத்துச் செல்வாயா என்றான்.

நான் அவனிடம் அது வேறு இதுவேறு என்றேன். அது எப்படி அது வேறு இது வேறு ஒன்றும் புரியவில்லையே என்றான். அவனிடம் மருத்துவமனைக்கு படுக்கையை எடுத்துச் செல்லமுடியாது ஆனால் மூச்சுக்குழாயை கடையில் வாங்கமுடியும். நம் வசதிக்கேற்ற விலையில் கிடைக்கிறது. அங்கே பலர் அவர்களது சொந்தமான மூச்சுக்குழாயை பயன்படுத்துவதைக் கண்டேன் என்றேன்.

அப்படியானால் நீயும் அப்படி ஒன்றை வாங்கிக் கோண்டு சென்றிருக்கலாமே என்றான். செத்தால்தானே சுடுகாடு தெரியும். அங்கே போனபின்தான் இதெல்லாம் தெரிந்தது. நாம் சொர்க்கமோ நரகமோ சென்றபின் தானே தெரியும்.

இவ்வளவு கெட்டவற்றைப் பண்ணியும் சொர்க்கம் கிடைத்திருக்கிறதே இன்னும் கொஞ்சம் சேர்த்து பண்ணியிருக்கலாமோ என்றும் அல்லது இவ்வளவு நல்லது பண்ணியும் நரகம்தான் கிடைத்திருக்கிறது நல்லதே பண்ணியிருக்க கூடாதோ என்றும் நினைக்க முடியும் என்றேன்.

அடுத்ததாக நீச்சல் உடைபற்றி சொல்கிறேன். சரியான உடை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஈரமாய் நீர் சொட்டிக்கொண்டிருக்கும் உடையை போடுவதும் கடினம் கழற்றுவதும் கடினம். சிலவற்றை அனுசரித்துத்தான் போகவேண்டும். இல்லாவிடில் எல்லாவற்றையும் சொந்தமாக வாங்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருநாள் கூத்துக்கு மீசையை சிரைத்த கதையாகத்தான் இருக்கும்.

-சங்கர சுப்பிரமணியன்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *