எவரும் அழுத்தம் கொடுக்க முடியாது ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்புங்கள்
ஐ.நா. அகதிகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாமையினால் வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு எவருக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும், தற்போது இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை திருப்பியனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ரோஹிங்கியா அகதிகள் இலங்கை வருவது மிகவும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. புலனாய்வு தகவல்களுக்கமைய ஒரு இலட்சம் வரையிலான அகதிகள் இலங்கை வரலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். இவர்கள் அகதிகள் அல்ல என்றும் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகுகளில் வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர்கள் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ.நா. அகதிகள் தொடர்பான சாசனத்தில் நாங்கள் கையெழுத்திடாமையினால் அகதிகள் தொடர்பான நிறுவனங்களுக்கு இந்த விடயத்தில் எந்த அழுத்தத்தையும் கொடுக்க முடியாது.
ஐநாவினால் எமது நாட்டுக்கு எதிராக போர்க் குற்றம் செய்ததாக தீர்மானங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அது தொடர்பான சாட்சியங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மறுபக்கத்தில் எப்படி இவ்வாறான அகதிகளை பொறுப்பேற்குமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று கூறப்படும் நபர்கள் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினர். இவர்களை யாரோ வழிநடத்துகின்றனரா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
இவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களே. எமது நாட்டின் முஸ்லிம்கள் சிங்க கலாசாரத்துடன் இணைந்தே இருக்கின்றனர். ஆனால் மற்றைய நாடுகளின் முஸ்லிம்கள் அப்படியல்ல. அவர்கள் ஷரியா சட்டம் போன்றவற்றை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். அந்த கலாசாரத்தை கொண்டவர்கள் எமது நாட்டின் கலாசாரத்திற்கு பொருத்தமில்லை.
உலகில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உள்ளன. ஏன் ஐ.நா போன்ற அகதிகளுக்கான நிறுவனங்கள் அவ்வாறான நாடுகளுக்கு இவர்களை அனுப்புவதில்லை என்றும் கேட்கின்றோம். எமது நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியிலும் போசனைக் குறைப்பாட்டிலும் இருக்கின்றது. எமது தீவு சிறியது. இவ்வாறான நிலைமையில் இந்த அகதிகளை ஏற்றுக்கொள்வது பிரச்சினைக்குரியது என்பதுடன் இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையே பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
உலகலாவிய ரீதியில் ஆட்கடத்தல், போதைப் பொருள் வியாபாரம், பயங்கரவாதம், ஆயுத கடத்தல் மற்றும் விபச்சாரம் என்பன நடக்கின்றன. அகதிகளின் போர்வையில் அவர்களும் வரலாம். இதனால் நாடு என்ற ரீதியில் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல்களும் நடக்கலாம். இதனால் வருகின்ற அகதிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு அவர்களை மீண்டும் நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், முஜிபூர் ரஹுமான் போன்றோர் அந்த அகதிகளை இங்கே வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் யுத்தத்தில் எமது நாட்டில் இடம்பெயர்ந்த 11ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் இருக்கின்றனர். அத்துடன் இயற்கை அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் வரையில் முகாம்களில் இருக்கின்றனர். இவ்வாறான அகதிகள் தொடர்பில் கதைக்காது எவ்வாறு வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் கதைக்க முடியும். இது அரசியல் லாபத்திற்காக செய்வது போன்றே தெரிகின்றது. பணம் செலுத்தி படகுகளில் வருபவர்கள் அகதிகள் அல்ல என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
அத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் கிழக்கு மாகாணத்தில் தனியான அலுவலகமொன்று அமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதனை பார்க்கும் போது முஸ்லிம் அகதிகளுக்கும் அவரின் கருத்துக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவே தெரிகின்றது.
![]()