பிள்ளையானால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்

முன்னர் பதவி வகித்த அரசாங்கங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) , அவருக்குரிய சிறப்புரிமையையும் பாவித்து பாராளுமன்றத்திற்குள்ளும், அவருக்கு இருக்கின்ற அரசியல் செல்வாக்கை பாவித்து பாராளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமை(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் அவ்வப்போது பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்திருந்தேன். இந்த முறைப்பாடு தொடர்பாக, என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், அவ்வாறு செல்லாது இருந்தால் அங்கு போவேன், இங்கு போவேன் எனக் கூறினார். இது கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் இதில் என்ன நடக்கும் எனத் தெரியும்தானே, நான் உன்னை கௌரவமாக அனுப்ப வேண்டும் என நினைக்கின்றேன் இல்லையேல் நீ அவமானப்பட்டு போக வேண்டி வரும் என என்னை அவர் எச்சரித்து அச்சுறுத்தி இருந்தார்.

அது மாத்திரமன்றி அவருடன் சேர்ந்த இன்னும் இருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய செயற்பாடுகளுக்கு என்னை ஒத்துப் போகுமாறும் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். அது தொடர்பான ஒலிப் பதிவுகள் அனைத்தையும் நான் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கின்றேன்.

இந்த வழக்குத் தொடர்பில் பொலிசாரினால் எனக்கு கடிதம் தரப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை பொலிசார் தொடர்பு கொள்வதாகவும் அவரது வாக்குமூலத்தை பெறமுயற்சிப்பதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்திலே அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என்பதை அவர்கள் அப்போது குறிப்பிட்டிருக்கவில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திலே சமர்ப்பணம் செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர் இரண்டு நோட்டீஸ்கள் வரவில்லை எனத் தெரிவித்திருந்தார். பின்னர் அவருடைய காரியாலயத்தின் கதவினிலே ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில்தான் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவரால் எனக்கு குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவெனில், அவருடைய காலப் பகுதியில் அவருடைய செயற்பாடுகளுக்கு நான் துணை போகவில்லை என்பதேயாகும்.அவர் எனக்கு திட்டமிட்டு பல அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார். அந்த அச்சுறுத்தலின் விளைவாக அரச உத்தியோகத்தர் ஆகிய நான் நிற்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். ஏற்கனவே நான் அரச கடமையில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கும் உள்ளானேன். அதன் பின்னர் எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பை கூட மீளப் பெறுவதற்கு அவருடன் சேர்ந்த இன்னும் சிலர் ஒன்று சேர்ந்து பிழையான அறிக்கைகளை விடுத்து என்னுடைய பாதுகாப்புகளை நீக்குவதற்காக செயற்பட்டிருந்தார்கள். அதற்காகவும் நான் உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கின்றேன்.

அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே அவருடைய பதவிக் காலத்திலே அரசாங்க கடமையை மேற்கொள்வது என்பது பெரும் துர்ப்பாக்கிய நிலைமையாகவே இருந்தது. இதனை அனைவரும் அறிவார்கள்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் , தனவந்தர்களுக்கும், நான் காணி கொடுத்ததாக தெரிவித்து வருகின்றார். காணி மோசடியிலே நான் ஈடுபட்டிருந்தால் பொலிசார் இருக்கின்றனர், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு காணப்படுகிறது, அரசு இருக்கின்றது. இவ்வாறான இடங்களில் இன்று வரை எனக்கு எதிராக, நான் மோசடியாக செயற்பட்டதாக, காணிகளை விற்பனை செய்ததாக, மோசடியாக செயற்பட்டதாக எந்த விதமான விசாரணைகளோ வழக்குகளோ இல்லை. யாரும் தாக்கல் செய்யவுமில்லை எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *