எதிர்வரும் நாட்களில் சட்டவிரோதமாக ஒரு இலட்சம் அகதிகள் நாட்டுக்குள் நுளையலாம்

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு 1 இலட்சம் அளவிலான அகதிகள் சட்டவிரோதமான முறையில் வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நாட்டுக்கு வருகைத் தந்துள்ள 116 மியன்மார்அகதிகள் உண்மையில் அகதிகளாக வருகைத் தந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச சட்டத்துக்கு அமைய செயற்பட முடியும் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம்,

இலங்கைக்கு அகதிகளாக வருகைத் தந்துள்ள மியன்மார் ரோஹியங்கா முஸ்லிம் சமூகத்தினர் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலும், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக்கொண்ட பிரகடனங்கள் ஆகியவற்றுக்கு அமைய செயற்பட வேண்டுமென வலியுறுத்தியதுடன் இந்த அகதிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் பதிலளிக்கையில்,

மியன்மார் நாட்டில் இருந்து 116 பேர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் படகு மூலம் வருகைத் தந்துள்ளனர். அவர்களிடம் பொலிஸார் முன்னெடுத்த ஆரம்ப கட்ட விசாரணைகளில்,அந்த அகதிகள் மியன்மார் நாட்டு நாணய அலகில் 500 இலட்சம் ரூபாவை ஆட்கடத்தல்காரர்களுக்கு கொடுத்துள்ளதாகவும், அத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுத்திய தரப்பினருக்கு மியன்மார் நாணயத்தில் 800 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

மியன்மார் அகதிகள் உண்மையில் அகதிகளாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சர்வதேச சட்டத்துக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். தற்போது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் புலனாய்வு தகவல்களுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஒரு இலட்சம் அளவிலான அகதிகள் சட்டவிரோதமான முறையில் வருகைத் தருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. ஆகவே இவ்விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஆகவே முறையான விசாரணைகளின் பின்னரே சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மீண்டும் எழுந்த ரவூப் ஹக்கீம் எம்.பி., அகதிகளாக செல்பவர்களை எவரும் இலவசமாக அழைத்துச் செல்வதில்லை. மியன்மார் நாட்டின் நிலைமையை முழு உலகும் அறியும். இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள், பெண்கள், ஆகவே மனிதாபிமானத்துடன் சர்வதேச சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள்.

அகதிகளாக வருகைத் தந்துள்ளவர்களை மீண்டும் மியன்மார் நாட்டுக்கு அனுப்பி வைப்பது பாரியதொரு அநீதி. அவர்களை பிறிதொரு நாட்டுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வையுங்கள் கடந்த காலங்களிலும் அவ்வாறு இலங்கையில் இடம்பெற்றுள்ளது என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, மியன்மார் அகதிகளை அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை . இவ்விடயம் குறித்து மியன்மார் அரசாங்கத்துடன் கருத்துக்களை மாத்திரமே பகிர்ந்துக் கொண்டுள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *