உரையாற்ற எனக்கு நேரம் தருவதில்லை; சபையில் அர்ச்சுனா எம்.பி.ஒழுங்குப் பிரச்சினை
அர்ச்சுனா எம்.பி தொடர்பில் குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது இதன்போது சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த ஒழுங்குப்பிரச்சினை,அது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க முன்வைத்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து கூறுகையில்,
எனக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்படுவதில்லை. டிசம்பர் 18ஆம் திகதி எனது சிறப்புரிமை மீறல் சம்பந்தமாக சபாநாயகரிடம் கூறியுள்ளேன். ஆனால் இன்று வரையில் அதற்கு பதிலளிக்கப்படவில்லை. ஜனவரி 7ஆம் திகதியான இன்று வரையில் உரையாற்ற எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நான் பாராளுமன்றத்திற்கு வந்து பயணில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நான் வருகின்றேன். ஆனால் எனக்கு இதில் எந்த பயனும் இல்லை. இங்கு வந்து மேலே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு போக முடியாது. எனவே எனக்கு பதில் வழங்குங்கள் என்றார்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் , இது தொடர்பான பதிலை வழங்குவதற்கான யோசனையை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க கூறுகையில், எதிர்க்கட்சி குழுவினரும் எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போது இந்த விடயம் தொடர்பிலும் கலந்துரையாடினோம். இந்தப் பிரச்சினை தொடர்பில் நாங்கள் உங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். எழுத்து மூலமும் உங்களிடம் இது தொடரபில் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.
இவ்வேளையில் மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த அர்ச்சுனா எம்.பி ,
பாராளுமன்றத்திற்குள் எனக்கு உரையாற்றுவதற்கே நேரம் எதிர்க்கட்சியினால் ஒதுக்கப்படவில்லை என்றால் எப்படி நாங்கள் ஒன்றாக நாட்டை கொண்டு செல்லப் போகின்றோம் என்று எதிர்பார்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில்,
எதிர்க்கட்சி பிரதம கொரடாவால் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கமைய நாங்கள் அர்ச்சுனா எம்.பி தொடர்பில் குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தக் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை வந்த பின்னர் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
![]()