தமிழ் இனப் படுகொலையில் அநுரவுக்கும் முக்கிய பங்கு

இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்கதான் வன்னியில் இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவ வீரர்களை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமானவராக இருந்தார்என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இன்று நாட்டில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. ஊழலை ஒழிப்போம் என்பதன் அடிப்படையில் ஆட்சி மாறியிருக்கின்றது. இந்த ஆட்சியாளர்கள் ஏற்கனவே மிக மோசமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக செயற்பட்டவர்கள் இவர்கள். இங்கு வந்திருக்கின்ற அநுர அரசு என்பது ஜே.வி.பியின் முகம். இவர்கள் அரசியல் ரீதியாக வந்த ஜே.வி.பி, ஆனால் நடைமுறையில் என்.பி.பி யாக இருக்கின்றார்கள்.
ஆகவே அரசியல் ரீதியான ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவர்களது அரசியல் என்பது ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள தேச நாடு பௌத்த நாடு .இதற்காக நாங்கள் கட்டாயம் சிங்கள மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் தென்பகுதியில் வேலை செய்திருக்கின்றார்கள்.அவர்கள் இன்றும் தென்பகுதி மக்களுடன் கதைக்கும் போது, தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்காவிட்டால் ஆயுத ரீதியாக அவர்களை அடக்குவோம் என்று பல கூட்டங்களில் கூறியிருக்கின்றார்கள்.
இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்கதான் வன்னியில் இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது, தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவத்தினரை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமான நபராக இருந்தார்.
எங்களுடைய மக்கள் தமிழ் தேசியத்திலிருந்து ஒரு நாளும் விடுபடவில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான,எமது இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும்.
புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று சிங்கள தேசம் கனவு காண்கின்றது. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்களும் எமது தமிழ் மக்களது விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.
![]()