இலக்கியச்சோலை

‘குரங்குத் தம்பி’ நூல் திறன்நோக்கு…  கவிஞர் இக்பால் அலியும் சிறுவர் பாடல் வெளியும் …. இரண்டாம் விசுவாமித்திரன் 

இரண்டாம் விசுவாமித்திரன்

சிறுவர் இலக்கியம் என்பது பதினான்கு வயதிலும் குறைவானவர்களின் தளத்தில் காலூன்றி வளரும் ஒரு துறையாகும். அதன் கூறுகள் பல வகைத்து. பாடல்கள், கதைகள், நெடுங்கதைகள்,நாடகம்,விடுகதை,சித்திரக் கதை என பல திசைகளில் அது கிளை பரப்பும். இவ்வாறான வடிவங்களையெல்லாம் உள்வாங்கியே தமிழில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுகின்றது.

தமிழ் மொழியில் தாலாட்டு,அகநானுறு,தொல்காப்பியம்,ஒளவையார் என்று சிறுவர் இலக்கியத்தோடு தொடர்புபட்ட தொன்ம வரலாறு இருக்கிறது. மகாகவி பாரதியாரே சிறுவர்களை நோக்கிப் பாட்டெழுதிய முதலாவது கவிஞர் என்ற தகவலும் உள்ளது. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர் பாடல்களைத் தந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பாட்டி வடை சுட்டதும் முயல் ஆமையிடம் தோற்றுப் போனதும் நரி திராட்சைக் குலையை எட்டி எட்டிப் பார்த்து எட்டாமல் கொட்டாவி விட்டதும் பாடசாலைக் காலத்துச் சிறுவர் கதைகள். அம்புலி மாமா,கோகுலம் போன்ற சிறுவர் சஞ்சிகைகள் தந்த கதைகளை எம்மால் மறக்க முடியுமா?

யார் எழுதினார் என்பதே தெரியாமல் நாம் பாடி மகிழ்ந்த கைவீசம்மா கைவீசு என்ற பாடலும் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு.அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடலும் ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆநந்தம் ஆநந்தம் தோழர்களே என்ற நவாலியூர் சோசுந்தரப் புலவரின் சிறுவர் பாடலும் இன்னமும் எங்கள் நெஞ்சங்களில் வேப்பம் பிசினாக ஒட்டியிருக்கின்றன. சிறுவர்களை உள்வாங்கி எழுந்த பாடல்கள் அவை.அவற்றின் உயிர் இழையாக சிறுவர்களின் உளவியலே இருக்கின்றது..
சிறுவர்கள் தனித்துவமானவர்கள்.எல்லையில்லாத கற்பனையில் வாழ்பவர்கள். அவர்களின் சுதந்திரம் விசித்திரமானது. அவர்களுக்கென்று ஒரு உலகம் இருக்கிறது. இவற்றையெல்லாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்பவர்களால் மட்டுமே மேன்மையான சிறுவர் இலக்கியத்தைப் படைக்க முடியும்.

அவ்வாறானவர்களுள் ஸ்ரீ லங்காவின் கவிஞர் இக்பால் அலியும் ஒருவர்
கவிஞர் இக்பால் அலி இலக்கிய நேசிப்புக் காரணமாக எண்பதுகளின் பின் அரைக்கூறில் எழுதத் தொடங்கியவர். கவிதை,கட்டுரை,பத்தியெழுத்து, திறன்நோக்கு,நேர்காணல்,ஊடகம் என்று தனது வல்லபங்களை வெளிப்படுத்தியவர். கலை இலக்கியச் செயற்பாடுகளின் மூலமாக தன்னையும் பிறரையும் வளப்படுத்தியவர். அச்சு மற்றும் மின் ஊடகங்களின் பிராந்தியப் பொறுப்பாளராகக் கடமையாற்றி கைதட்டல் வாங்கியவர்.
அவரின் கவிதா மனம்பற்றி பலரும் பேசியுள்ளனர். பல்கலைக்கழகங்கள் அவரை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியுள்ளன.

ஸ்ரீ லங்காவின் பேராதனை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜமாஹிர் அவர்கள் ஈழத்தின் சிறுவர் இலக்கியம் குறித்த கவிஞர் இக்பால் அலியின் வகிபாகம் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.

‘ஞானம்’ சஞ்சிகை வெளியிட்ட ஈழத்துப் போரிலக்கியச் சிறப்பிதழில் இக்பால் அலி எழுதிய ‘பாய்த்தோணி’ என்ற கவிதைபற்றி சிங்கப்பூர் முனைவர் கோட்டி திருமுருகாநந்தம் அவர்கள் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு வழிகளில் இக்பால் அலியின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று கதவு திறந்து காட்டியுள்ளார்.

கடந்த 21.12.2024 இல் கொழும்பில் நடந்த விழாவொன்றில் சிறுவர் பாடலுக்கான தேசிய இலக்கிய ஆளுமை விருது இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இக்பால் அலி இதுவரை பத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். அவற்றுள்; ‘நான் மூன்று சக்கரக்காரன்’ , ‘அன்பு பெருக’, ‘நல்லதொரு பயணம்’ செல்லக்குட்டி ஆகிய நான்கு நூல்களும் சிறுவர் இலக்கியம் தொட்டு எழுந்தவை. ஐந்தாவது நூலாக ‘குரங்குத் தம்பி’ என்ற நூலை எழுதி சிறுவர் இலக்கியத்தின்; முன்வரிசை ஆசனமொன்றில் அமர்ந்துள்ளார்.
சிறுவர் இலக்கியத்தின் மேன்மை என்பது படைப்புகளின் எண்ணிக்கையில் அல்லாமல் சிறுவர்களின்; விருப்பத்துக்குரிய சங்கதிகள்,மொழி லாவகம்,எளிமை, வெளியில் வரும் நீதி என்று பல வஸ்துகளில் தங்கியுள்ளது. இவற்றை ‘குரங்குத் தம்பி’ என்ற நூலின் பாடல்களுக்குள் தேடும்போது ‘சொரியல் சொரியலாக’ அவை நமக்குக் கிடைக்கின்றன. அதன்மூலம் நூலின் மேதமை ருசுப்படுத்தப்படுகின்றது.

‘குரங்குத் தம்பி’ என்ற நூலின் பெயர் பிள்ளைகளுக்குப் பஞ்சு மிட்டாய் தருகிறது. அதே தலைப்பிலான பாடல் நூலின் நுழைவாயிலில் முதலாவதாக வந்துநின்று நம்மை வரவேற்கிறது.

இக்பால் அலி

சிறுவர் இலக்கியத்தில் நாடகப் பாடல்கள் மிக அரிதாகவே பயன்பாட்டுக்கு வருவதுண்டு. இந்நூலில் குரங்குத் தம்பி என்ற முதலாவது பாடலே நாடகப்பாங்குதான். நல்ல கை முழுத்தம்.
டான்டான் டான்டான் டான்டான்; டான்டான் டான்டான் டான்டான்
காட்டுக் குரங்கு வீட்டுக்கு வந்தது பாட்டுப்பாடி கூத்துப் போட்டது சட்டி பானை திறந்து பார்;த்தது தாப்புக்காட்டி தூக்கிச் சென்றது.

என்று முரசு கொட்டி மங்கலமாக ஒலிபரப்பாகிறது முதலாவது பாடல்.
இப்பாடலின் இன்னுமொரு பகுதி இது.

மழைநீர் ஓடும் அழகைப் பார் கொழுத்தும் வெயிலின் தணலைப் பார் வானில் சுற்றும் பறவைக் கூட்டம் ஆடிப்பாடி மகிழ்வதைப் பார் இதுபோன்ற பாடல் வரிகள் ஒலியும் ஓசையுமாய் நூலுக்கு குஞ்சம் சூடி மகிழ்கின்றன.

பச்சை மஞ்சள் என்று சிவப்பு நீலம் என்று வெள்ளை கறுப்பு என்று குதிரை கழுதை என்று சிங்கம் புலி என்று முயல் பூனை என்று யானை மாடு என்று பசு நாம்பன் என்று காய் பழம் என்று பள்ளம் மேடு என்று சரி பிழை என்று தராசைப் போல நின்று நீதி செய்வோம்
போன்ற பாடல்கள் படிக்கப் படிக்கச் சுவை பயக்கத் தக்கன.

சிற்றெறும்புக் கூட்டம்,ஆமையில் சுற்றுலா,காயப்பட்ட கோழி, செல்லப் பிள்ளை என்று சிறுவர்களை மனம் மகிழச் செய்யும் பாடல்களுக்குக் குறைவேயில்லை. இன்னும் சில பாடல்கள் அறிவியல் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.
நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னுமொரு விடயம் பெரியார் பாடல்களாகும்.

‘சிறுவர் இலக்கியத்தில் பெரியார்களையும் அவர்களின் வாழ்வு முறைகளையும்; கொண்டு வருவது மிகவும் அரிதாகவே இடம் பெறும். நீண்ட தேடலின் பின்னரே சிறுவர் பாடலுக்குள் ஒரு பெரியாரைக் கண்டு கொள்ள முடியும்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இக்பால் அலி தனது சிறுவர் பாடல்களுக்குள் பேராசிரியர் சபா ஜெயராசா, பன்னூலாசிரியர் அனுரசிரி ஹெட்டிகே,ஆய்வறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகிய பெரியார்கள் மூவரை அடையாளம் காட்டியுள்ளார். சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று வகைக்கொன்றாக எடுத்து இன ஒறு;றுமை பேணி சிறுவர்களுக்கு நமது அறிஞர்களை அறிமுகம் செய்தமை இக்பால் அலியின் பரந்த மனத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
பேரா.சபா ஜெயராசா கல்வித்துறையில் மட்டுமல்ல சிறுவர் இலக்கியத் துறை உட்பட்ட பல்துறை ஆய்வு முயற்சிகளுக்காகப் பெரிதும் பேசப்படுபவர்.

அனுரசிரி ஹெட்டிகே ஊடகவியலாளராக இருந்து சிறுவர் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பு நல்கியதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரி ஆனவர்.
எஸ்.எச்.எம்.ஜெமீல் கல்வித்துறை நிர்வாகத்திலும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய நடவடிக்கைகளிலும் விலாசம் பெற்றவர்.

மேற்படி பெரியார்களை இந்நூலின் பாடல்களுக்குள் கொண்டுவந்ததன் மூலம் சிறுவர் இலக்கியத்தில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத வாசலொன்றுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இக்பால் அலி.

நூலாசிரியர் இக்பால் அலியின் இவ்வாறான ஊழியம் பாராட்டக்கூடியது. இந்நூலை எழுதியதன்மூலம் முக்கிய பக்கங்களை நமக்குக் காட்டியுள்ளார். அடிக்கடி காணாமல் போகும் சிறுவர் இலக்கியம் இக்பால் அலி போன்றவர்களின் உழைப்பினால்; ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

காலவெளியை இந்த நூற்றாண்டின் முதல் கால்பகுதியானது கடந்துபோக உள்ள இன்றைய நிலையில் எண்ணிம மயமான (DIGITAL) சிறுவர் உலகம் இக்பால் அலி போன்றவர்களிடமிருந்து ‘குரங்குத் தம்பி’ போன்ற இன்னும் பல ஆக்கங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *