முச்சந்தி

இந்தியாவுக்கு எதிரான பெரும் சவால்: பங்களாதேசில் மீள கால் பதிக்கும் பாகிஸ்தான்!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(1971க்குப் பிறகு முதல் முறையாக வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் திரும்ப திட்டமிட்டுள்ளது. தற்போது புதிய ஆட்சியில் வங்காளதேச இராணுவத்தால் இந்திய எதிர்ப்புக் கோட்பாட்டை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக பாகிஸ்தான் இராணுவ பயிற்சிகள் உள்ளன என்று கூறப்படுகிறது)
1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தால் தான் வங்கதேசம் என்ற ஒரு புதிய தனிநாடு உருவானது. அந்த யுத்தத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி தமது 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தார். உலக யுத்த வரலாற்றிலேயே 93,000 வீரர்கள் சரணடைந்தது வங்கதேசத்தில் இந்தியா நடத்திய யுத்தத்தில்தான்.
இந்திய பிராந்திய நலனுக்கு எதிராக:
தற்போது இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிராக 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, பாகிஸ்தான் இராணுவம் வங்கதேசம் செல்ல உள்ளது. வங்கதேச இராணுவத்திற்கு பிப்ரவரி 2025 முதல் மைமென்சிங் கன்டோன்மென்ட் (Mymensingh cantonment) மற்றும் பிற இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக- கிழக்கு பாகிஸ்தானாகவே வங்கதேசம் 1971-ம் ஆண்டுக்கு முன்னர் வரை இருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கி பல படுகொலைகளை செய்தது. இதனால் வங்கதேச தனிநாடு விடுதலைப் போரை முஜிபுர் ரகுமான் நடத்தினார். அவருக்காக பாகிஸ்தானுடன் இந்தியா யுத்தம் நடத்தியது. அப்போது நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை வரலாற்று ரீதியாக பகைமை கொண்ட வங்கதேசம், தற்போது இந்த பயிற்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவிற்கு எதிரானதா எனும் கவலைகளை எழுப்பியுள்ளது. வங்கதேச இடைக்கால அதிபர் யூனுஸ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தானைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தரவரிசை அதிகாரிகளால் இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்துடன் பிப்ரவரி 2025 முதல் தனது ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் மைமென்சிங் கன்டோன்மென்ட்டில் தொடங்கி பங்களாதேஷ் இராணுவத்தின் நான்கு மாநிலங்களில் பயிற்சி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இராணுவத்தின் பயிற்சி மற்றும் கோட்பாடு கட்டளை தலைமையகமாக மைமென்சிங்கில் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வங்கதேச ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கலாம் என ஆதாரங்கள் கூறுகின்றன.
இஸ்லாமாபாத்துடன் புதிய உறவு :
இஸ்லாமாபாத்துடன் உறவுகளை மேம்படுத்த தற்போதைய யூனுஸ் ஆட்சியின் முயற்சியின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தால் வழிநடத்தப்படும் முதல் பயிற்சித் தொகுதி ஒரு வருடம் நீடிக்கும். பாகிஸ்தான் ராணுவத்தின் கூட்டுப் படைத் தலைமை ஜெனரல் எஸ் சம்ஷாத் மிர்சாவால் வங்காளதேசத்திற்கான ராணுவ பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வங்காளதேசத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவாமி லீக் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாக இந்திய ஆதரவு சித்தாந்தத்துடன் வங்காளதேச இராணுவத்தின் போதனைக்கு எதிராக தற்போதய நிலமை அச்சத்தை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அதிகாரிகள், 1971 இல் வங்க நாடு சுதந்திரம் அடைய முதல் இரண்டு தசாப்தங்களாக பங்களாதேஷ் இராணுவத்தில் தலைமைப் பதவிகளை வகித்தனர். இந்த பட்டியலில் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் எச்.எம். எர்ஷாத் ஆகிய இருவரும் ஜனாதிபதிகளாக பதவியேற்றனர்.
ஆயினும் முன்னாள் அதிபர் எர்ஷாத் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இந்தியாவில் உள்ள அரசியல் தலைமையுடன் நல்ல தொடர்புகளைப் பேணி வந்தார்.
தற்போது புதிய ஆட்சியில் வங்காளதேச இராணுவத்தால் இந்திய எதிர்ப்புக் கோட்பாட்டை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இந்தப் பயிற்சிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
அதேவேளை வங்கதேச அரசால் அவாமி லீக் மற்றும் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட பங்களாதேஷ் இராணுவத்தின் தலைமை தற்போதைய ஆட்சியால் குறிவைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான பெரும் சவால்
பங்களாதேஷில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பது நிலத்தால் சூழப்பட்ட
வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கு சவாலை உருவாக்கி உள்ளது.
இதற்கிடையில், கடந்த 21/12/24 வெள்ளிக்கிழமை சிட்டகாங் துறைமுகத்திற்குள் நுழைந்த கப்பல் மூலம் பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் பங்களாதேஷை அடைந்ததாக கூறப்படுகிறது.
வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பல அவற்றில் இருந்தன. உள்ளூர் அதிகாரிகள் கப்பலின் சரக்குகளை தேடும் நடவடிக்கையை தொடங்கியபோது அவை கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிபொருட்களைக் கொண்ட சரக்குகளின் நோக்கம் என்ன என்பதை துறைமுக அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை:
வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஒன்று அமைந்த போதும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழிய வன்முறைகள் வெறித்தனமாக தலைவிரித்தாடுகிறது.
இந்து கோவில்கள் தாக்கப்படுவதும் இந்து அதிகாரிகள் அரசு பதவிகளில் இருந்து விரட்டியடிக்கப்படுவதும் தொடருகிறது.
இந்திய எதிர்ப்பில் வங்கம் ?
கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தின் விளைவாக வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடிய வங்க தேசத்தின் தந்தை முஜிபுர் ரகுமானின் சிலையை தகர்தனர்.
அத்துடன் வங்கதேச விடுதலைக்கான யுத்தத்தின் சரித்திர சாட்சியாக இருந்த சிலையையும் வன்முறையாளர்கள் தகர்த்துள்ளனர். உலக யுத்த வரலாற்றிலேயே 93,000 வீரர்கள் சரணடைந்தது வங்கதேசத்தில் இந்தியா நடத்திய யுத்தத்தில்தான்.
இதனை வெளிப்படுத்தும் வகையில் தலைநகர் டாக்காவில் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. வங்கதேசத்தில் மதவெறியர்கள் கை ஓங்கி இருக்கும் நிலையில் டாக்காவில் உலக யுத்த வரலாற்றின் பெருமிதமிக்க சாட்சியாக இருந்த இந்த சிலையும் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்திய எதிர்ப்பாளர்கள்தான் இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என பலர் கருதுகின்றனர். இந்திய கலாசார மையம், கோவில்கள், இந்துக்களின் வீடுகளைத் தகர்த்தவர்கள் இப்போது 1971-ம் ஆண்டு யுத்தத்தை நினைவூட்டும் சிலையையும் தகர்த்துள்ளமை இந்திய விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button