முச்சந்தி

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு ”பட்ஜெட்” மூலம் ஆக்க பூர்வமான தீர்வுகளை அரசு வழங்க முடியும்

இலஞ்சம், ஊழல்,மோசடி என 76 வருடங்களாக சரியான பாதையில் செல்லாத நாட்டை தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக தற்போதைய அரசாங்கம் வழிநடத்தி வருகின்றது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு அடைந்த பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை கூடிய விரைவில் உயர்த்துவது இன்றியமையாதது எனவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தொடர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்படும் என நம்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நேற்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் கூறுகையில்,

இலஞ்சம், மோசடி, ஊழல் போன்றவற்றுக்கு மேலதிகமாக, நமது பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சரியான திசையில் வழிநடத்தும் திறன் அப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. இதன் இறுதி விளைவாக நாடு அதல பாதாளத்தை நோக்கி சென்றது.
இதைப் போக்க, 2024 ஆம் ஆண்டிற்கான சில அடிப்படைகளைத் தயாரித்துள்ளோம். குறிப்பாக பொருளாதார வளர்ச்சி 5வீதம் என்பது சாதகமான அம்சம். கடந்த ஆண்டு, தொழில் துறையின் வளர்ச்சி கிட்டத்தட்ட 10வீதம் அளவில் பராமரிக்கப்பட்டது. பண வீக்கத்தை கணிசமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதும் சாதனைதான். வட்டி விகிதம் வணிக சமூகத்தை நாட்டிற்கு தேவையான ஒரு ஊக்கமளிக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய வங்கியின் கையிருப்புகளை அதிகரித்து, ரூபாவின் மதிப்பை நிலையான அளவில் பராமரிக்க முடிந்தது. இதன் மூலம், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான சில அடித்தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இலங்கையின் வளங்களின் அளவு, மனித மூலதனம் மற்றும் சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை இந்த ஆண்டு 8வீதம் – 10வீதம் நிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் செயற்பட வேண்டும்.
அத்தகைய பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் செலுத்தும் ஆபத்து மீண்டும் எழாது.

பொருளாதாரத்தையும் சமூகத்தையும் ஸ்திரப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டை வேகமாக வளரும் நாடாக மாற்ற வேண்டும். லஞ்சம், ஊழல், மோசடிகளுக்கு மக்கள் மூலமாகவே எதிர்ப்பு எழுந்துள்ளது.

அவர்களிடமிருந்து சுதந்திரமான நாடாக இந்த நாட்டை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அரசியல்வாதிகளும் மக்களும் காட்டுகிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் இந்த நிலைமைகளை புரிந்து கொண்டு தூய்மையான இலங்கையை கட்டியெழுப்ப நாட்டை வழிநடத்த வேண்டும். வரும் பெப்ரவரி மாதம் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் இதன் மூலம் இதுவரை இந்த நாட்டில் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு ஆக்க பூர்வமான தீர்வுகளை வழங்க முடியும் என நம்புகின்றோம். அதை அரசால் மட்டும் செய்ய முடியாது. அதற்காக சமூகமும் தியாகம் செய்ய வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button