கதைகள்

“மிடற்றுத் தாகம்”… சிறுகதை – 100 … அண்டனூர் சுரா

“அம்மா.., தாயீ, புள்ளைக்குப் பால் கொடுங்கம்மா ”

வீட்டிற்கும் வெளியே இறுக அடைக்கப்பட்டிருந்த கிறில் கேட்டைத் தவிர வீட்டின் அத்தனை கதவு, சன்னல்களும் திறந்திருந்தன. வீட்டிற்குள் மின்விசிறி சுற்றும் அரவமும் தொலைக்காட்சியின் இரைச்சலும் வெளியே கேட்டவண்ணமிருந்தன.

“அம்மா…, புள்ளைக்குப் பால் கொடுங்கம்மா ”

கிறில் கேட்டில் கன்னத்தைப் பதித்துகொண்டு குறுக்கும் நெடுக்குமான கம்பிகளின் வழியே அவள் வீட்டின் உட்புறத் தோற்றத்தைப் பார்த்துகொண்டிருந்தாள். அவளுடைய முகம் சோகமாகவும் கெஞ்சல் தொனியுடனும் இருந்தது. அவள் கேட்டினை அசைத்துப் பார்த்தாள். அவளால் அசைக்க முடியவில்லை. ஒரு பக்கக் கதவு தரைக்குள்ளாகவும் மற்றொரு கதவு உட்புறமாகவும் தாழ்ப்பாளிட்டிருந்தது.

இந்நேரத்திற்கு அந்த வீடடில் நாயொன்று இருந்திருந்தால் தொண்டைத் தண்ணீர் வற்ற குரை, குரையெனக் குரைத்திருக்கும். நாய் ஏன் குரைக்கிறதென்று யாரேனும் வெளியே எட்டிப் பார்த்திருப்பார்கள். அவள் நின்ற நேரத்திற்கு ஒரு மிடறு பாலோ அல்லது காதை நிறைக்கும் வசைகளோ கிடைத்திருக்கும். அவ்வீட்டில் அப்போதைக்கு நாய் இல்லாததால் அவள் நீண்ட நேரம்தொட்டு வாசலில் “அம்மா…, .தாயே..” என்று அழைத்துக்கொண்டிருந்தாள்.
. இந்த வீதியிலிருக்கும் அத்தனை வீடுகளிலும் பால் கேட்டாகி விட்டது. “அம்மா, தாயீ, சாமீ, அய்யா” என்று எனக் கெஞ்சிப்பார்த்தாகி விட்டது. ஒரு வீட்டிலாவது பால் முகம் காட்டப்பட்டதா என்றால் இல்லை. அத்தனை வீட்டிலும் அகோர முகம்தான்.

“இவள்வத் தொல்லை பெருந்தொல்லையாலே இருக்கு” – ஒரு வீட்டில்.
“இவள்வள நாட்டுக்குள்ளே விட்டதுபோதும். அப்பப்பா, அகதிகள் மாதிரியா நடந்துக்கிறாள்வ. சொந்த வீடு மாதிரில நடந்துக்கிறாள்வ” – இன்னொரு வீட்டில்.
“அடச்சீ” – மற்றொரு வீட்டில்.

“பாலாம் பால். பால் விக்கிற விலை தெரியாம வந்திடுறாள்வ”
“அடிக்கிற வெயில்ல பிரிட்ஜ்ல வைக்கிற பால்கூட கெட்டுப்போகுது. ஒனக்குத்தானடி ஒண்ணும் புரியல.”

“சோறு கேளு தாறேன். பால் கேட்காதே.”

இப்படியாக ஒவ்வொரு வீட்டிலும் பஞ்சப்பாட்டுகள். நாயை ஏவி அடுத்த வீட்டை நோக்கி விரட்டியடிப்புகள். கதவடைப்புகள். ஏளனப் பார்வைகள்….

இந்த வீடு ஒன்றுதான் நாய் இல்லாத வீடாக இருந்தது. தெருவின் கடைசி வீடும்கூட. இந்த வீட்டையும் விட்டால் வேறு எந்த வீட்டில் பால் வாங்குவதாம்?
“அம்மா.., தாயீ, என் புள்ளைக்கு ஒரு மொரட்டு பால் கொடுங்கம்மா”
அவள், மடிக்குள் கிடந்தக் குழந்தையின் தலை முடியைக் கோதிவிட்டுக்கொண்டாள். குழந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். கன்னத்தை மெல்ல அள்ளிக் கொஞ்சினாள்.
வீட்டிற்குள் ‘கக்…கக்….’ என்று இருமிக்கொள்வதும், ‘இக்கூம்’ என்று கனைத்துக்கொள்வதும் வெளியே கேட்டன. கனைப்பும் இருமலும் தடித்த ஆண்குரலாக இருந்தது.
“அய்யா.., சாமீ, பால் வேணுங்க.”
கண்ணையா கையில் தினசரியுடன் மேலில் சட்டையில்லாமல் நெஞ்சு முடியோடு போர்டிகோவில் நின்றவாறு வாசலைப்பார்த்தார். “யாரு?”
“ஏ புள்ளைக்கு பால் கொடுங்க சாமீ”
“பால் இல்லம்மா. வேற வீட்டப்பாரு.” போர்டிகோவில் கிடந்த சோபாவில் தினசரியை விரித்துவைத்துகொண்டு உட்கார்ந்தார். அவருடைய மனைவி சித்ரா தொலைக்காட்சித் தொடரில் படு சீரியஸாக இருந்தாள். மகன் சுபாஷ் லேப்டாப்பிலும் மகள் கோபிகா நோக்கியா கையடக்க பேசியிலும் கவிழ்ந்து போயிருந்தார்கள்.

“அய்யா, உங்களத்தான் சாமீ. பால் கொடுங்க.”

ஒரு மூதாட்டி வளைந்த ஊன்றுகோலுடன் நடையை மெல்ல எடுத்து வைத்துப் போர்டிகோவிற்கு வந்தார். அவருக்கு அவ்வளவாகக் காது கேட்கவில்லை. கண்ணையாவின் தாய் அவர். கண்களில் வட்டமிட்டிருந்த கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு வாசலைப் பார்த்தார். வாசலில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் நிற்பதைக் கண்டார்.
“அம்மா…தாயீ. நீயாவது ஏ புள்ளைக்கு ஒரு மொரட்டு பால் கொடு தாயீ.”
அவளது வாய் அசைவுகளையும் கெஞ்சல் முகத்தையும் பார்க்கையில் அவருக்குக் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. “அடியே, ஈனச்செறுக்கி. இந்த உறும நேரமும் அதுவுமா கொடுத்தக் கடன வசூலிக்க வந்தவ மாதிரி நிற்கிறே. போறீயா…இல்லையாடி.” கையில் வைத்திருந்த குச்சியை நீட்டி விரட்டியடித்தார்.

“ஒரே ஒரு மொரட்டு பால் கொடு தாயீ போயிடுறேன்”
“சொல்றேன், பிறகென்னடி இன்னும் நிற்கிறே”
“பால் தாயீ. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.”

அவள் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. குறுக்கும் நெடுக்குமான கம்பியைப் பிடித்துகொண்டு கண்கள் இடுங்க அவள் வெளியே நின்றுகொண்டிருந்தாள். முகம் எலும்பிடத்தில் பள்ளம் விழுந்துபோயிருந்தது.

அந்த மூதாட்டி கைப்பிடியை ஊன்றிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார். எங்கேயோ மேயப்போயிருந்த நாய் நான்கு வீடு தாண்டி வருகையில் ‘வவ்,வவ்’ எனக் குரைத்துக்கொண்டு வந்தது. கையில் வைத்திருந்த குழந்தையைப் பார்த்து ஏறி விழுந்து குரைத்தது. அவள் நாயிடமிருந்து குழந்தையைக் காக்க குழந்தையை தோளிற்கும், மடிக்குமாக மாற்றிக்கொண்டாள். நாயின் குரைப்பும் அகோர இரைச்சலும் தினசரியில் மூழ்கிக்கொண்டிருந்த கண்ணையாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.

“அடேய், கண்ணையா. நாய் குலைக்கிறது காதுல கீதுல விழுவுதா இல்லையாடா?” மகனை அவர் அரற்றினார்..
“என்னம்மா..” என்றவர் தினசரியை அப்படியே வைத்துவிட்டு வாசலை நோக்கி வந்தார்.
“பாரு, இந்த உரும நேரமும் அதுவுமா ஒருத்தி நிற்கிறத்த”
கண்ணையாவின் முகம் கோரமெடுத்தது. “யாரும்மா நீ?” அரற்றும் குரலில் கேட்டார்.
“பால் வேணுங்க சாமீ”
“அதான் இல்லைன்னு சொன்னேனே”
“ஒரே ஒரு மொரட்டு வேணுங்க சாமீ“

அவளுடைய கெஞ்சல், கனிந்த பார்வை, அழுதிட எத்தனிக்கும் உதடுகள் என அத்தனையையும் ஒருசேரப் பார்த்தார். உட்பக்கமாக நின்றவர் கேட்டைத் திறந்துகொண்டு வாசலுக்கு வந்தார்.
“உனக்கு என்ன குறையாம். இம்?. காலும் கையும் நல்லாதானே இருக்கு. வேலை செஞ்சி பிழைச்சா என்னவாம். இப்படிப் பிச்சை எடுக்கிற..” பற்களைக் கடித்துக்கொண்டு அவளை ஒரு விதமான கோபத்தோடு கடித்தார். அவரது கடிப்பும் பற்கள் நெறு,நெறுவெனக் கடிபடுவதையும் அவள் சட்டை செய்யவில்லை. சொன்னதையே கிளிப் பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டிருந்தாள். “ ஒரு மொரட்டு மட்டும் கொடுங்க சாமீ…”

“ஓன் பேரன்ன?”
“பால்”
“எங்கேயிருந்து வாறே?”
“வேணுங்க”
“இந்த வெயில்ல புள்ளய தூக்கிட்டு அலையாட்டி என்னவாம்”
“ஒரே ஒரு மொரட்டு”
“இது ஒன்னோட புள்ளையா?”
“பால் வேணுங்க சாமீ”

அவருக்கு மூக்கின் மேல் கோபம் வந்தது. பற்களைக் கடித்துக்கொண்டார். அருவறுப்போடு அவளைப் பார்த்தார். அப்பொழுதும் அவளது உதடுகள் ‘பால், பால்’ என்று முணங்கிக்கொண்டிருந்தன.

அவள் பார்க்க ஒரு மாதம் பட்டினிக் கிடந்தவளைப் போலிருந்தாள். ஒரு சோளத் தட்டைக்குச் சேலை கட்டிவிட்டதைப் போன்று அவளது உருவமிருந்தது. அவளது மொத்த எலும்பு, நரம்புகளை எண்ணிவிட முடியும் அளவிற்கு அவளது கூடுடம்பு இருந்தது. அவளது மேலாடை தோளிடத்தில் ‘ட’ வடிவில் கிழிந்து போயிருந்தது. அழுக்குச் சேலை உடுத்தியிருந்தாள். மார்பு நெஞ்சோடு ஒடுங்கிப்போய் அவள் உடுத்தியிருந்த சாக்கெட் தொளதொளத்துப்போயிருந்தது. இல்லாத இரண்டு மார்புகளுக்கிடையில் அவளது முந்தானை ஓடிக்கிடந்தது. தலை முடிகள் செம்பட்டைத் தட்டிப்போய் அள்ளி முடியாமல் பரந்து விரிந்துக்கிடந்தன. உதடுகள் இரண்டும் தண்ணீர்படாமல் பித்த வெடிப்புகளைப் போன்று வெடித்திருந்தன.

அவளது கண்கள் ஏக்கமும் துக்கமும் கெஞ்சலும் கலந்து ஒளியிழந்துபோயிருந்தன. விழிகள் இரண்டும் இடுங்கி குழிக்குள் விழுந்து விழியோரத்தில் கண்ணீர் பிசுபிசுத்து வழிந்து காய்ந்து தடமாக ஒழுகிக்கிடந்தது.

அவளிடமிருந்து பார்வையை எடுத்த கண்ணையா குழந்தையைத் துழாவினார். குழந்தையை அவளது வலது கை தாங்கியிருந்தது. குழந்தையை முந்தானையால் மூடியிருந்தாள். குழந்தையின் சூம்பியக் கால்கள் சவலைத் தட்டிபோய் வெளியே தெரிந்தன.

‘வவ், வவ்….’ எனக் குரைத்துக்கொண்டிருந்த நாயை விசில் அடித்துக் கூப்பிட்டதும் நாய் அவரை உரசிக்கொண்டு போர்டிகோவில் வந்து படுத்துக்கொண்டு நாக்கைத் தொங்கவிட்டவாறு பெருமூச்சு விட்டது. வாசலில் கிறில் கேட்டைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தவள் குழந்தையை இலகுவாகத் திருப்பி குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தாள்.

“இந்தாடி, எழுந்திருக்கிறீயா, இல்லையா ”
“பால் வேணுங்க தாயீ”
“ வெயிலடிக்குது, உள்ளே வந்தாவது உட்காரு”
“ஒரு மொரட்டு பால் வேணுங்க”
“பால், பால், பால். நாங்க என்ன மாடா வளர்க்கிறோம்”
“பால் கொடுங்க சாமீ. போயிடுறேன்”

“மரியாதையா சொல்றேன், எழுந்திருச்சிடு ஆமா” கண்ணையா அடிப்பதைப் போலக் கையை ஓங்கினார். நாக்கைத் துருத்தினார். அவள் எதையும் பொருட்படுத்தவில்லை. பால் வாங்காமல் நான் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்பதைப்போல அவள் உட்கார்ந்திருந்தாள்.
“சுபாஷ், அம்மாவக் கூப்பிடு…” கண்ணையா மகனிடம் ஏவினான். சுபாஷ் மடிக்கணினியில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் கண்களைத் திரையிலிருந்து எடுக்காமல் அவனது அம்மாவை உரக்க அழைத்தான். “அம்மா,அப்பா கூப்பிடுறாங்க..”

“ஏன்னடா?” என்றவாறு அவள் சீரியல் ஒலியைக் குறைத்தாள்.
“வாசல்ல ஒருத்திக்குப் பால் வேணுமாம்”
“இல்லைனு போகச்சொல்லு.”

மறுபடியும் அவன் பார்வையைக் கணினித் திரையிலிருந்து ஒரு அங்குலம்கூட நகர்த்தாமல், “ அப்பா, அப்பாயி ரெண்டு பேரும் சொல்லிப் பார்த்தாச்சு போறமாதிரித் தெரியல” என்றான்.
சித்ரா ரிமோட்டுடன் வாசலுக்கு வந்தாள். ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக ரிமோட்டை நீட்டி அவளை எழுப்பினாள். “எழுந்திரடி..”
“பால் வேணும் தாயீ”
“முதல்ல எழுந்திரி”
“ஒரு மொரட்டு மட்டும் வேணும்ம்மா”
“பால் விக்கிற விலையில ஒரு மொரட்டும் கிடையாது. அரை மொரட்டும் கிடையாது.”
“நீங்க நல்லா இருப்பீங்க தாயீ. பால் கொடுங்க போயிடுறேன்.”
“இச்சீ,கழுத. எழுந்திரிக்கிறீயா, இல்லையா. பிச்சப்போட்டு பிச்சப்போட்டுதான் என் வீடு பிச்சைக்காரன் குடும்பமாப்போச்சு. எழுந்தீரடீ.”
“ஏ புள்ளைக்குப் பால் வேணும் தாயீ”
மூன்று பேரும் திகைத்துபோய் இடுப்பில் கைகளை வைத்துகொண்டு நின்றார்கள். அவள் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள். “பால் வேணும், பால் வேணும், பால் வேணும்.”
அவளது பார்வை சாலையைப் பார்த்திருந்தது. உச்சி வெயில். தலையில் முந்தானைகூட போட்டுக்கொள்ளாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். குழந்தையின் பூஞ்சை உடம்பை ஒரு கறுப்பு அழுக்குத்துணியும், முந்தானையும் சுற்றியிருந்தன.
சித்ரா கூந்தலை அள்ளி முடிந்துகொண்டாள்.
“இந்தா, எழுந்திரி”
“அம்மா, ஏ புள்ளைக்கு பால் கொடுங்கம்மா”
“பாலும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. கிளம்பு”
“பால் வேணும்”
சித்ரா பெருமூச்செறிந்தாள். இடுப்பிற்குக் கைகளைக்கொடுத்து விரைத்து நின்றாள்.
“சோறு இருக்கு வேணுமா?”
“பால் வேணும்.”
“சாப்பிடுறீயா?”
“பால் வேணும்.”
அலைபேசியில் முகம் பதித்திருந்த கோபிகா, பார்வையை அதிலிருந்து எடுத்து அம்மாவிடம் சொன்னாள். “வீட்டுல வேல இருக்கு, பார். பால் வாங்கித்தாறேனு சொல்லு, போயிடுவா.”
”அதெ நீயே வந்து சொல்லேன்டி.”
கோபிகா அலைபேசியை ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டிற்குள் திணித்துகொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள்.
“வேல இருக்கு பார்க்கிறீயா?”
“பால் வேணும்.”
“வேலயப் பார்த்துக்கொடுத்திட்டு பால் வாங்கிக்கிட்டு போ”
“ஏ புள்ளைக்குப் பால் வேணும்”
“இந்தா, நா சொல்றத காது கொடுத்து கேளு. ஒண்ணுரெண்டு வேலைக இருக்கு. அதைப் பார்த்துக்கொடு. பால் தாறோம்.”
“ஏ புள்ளைக்குப் பால் தாங்க தாயீ, உங்களுக்குப் புண்ணியமாப்போகும்.”
“இம், தர்றோம். வேலைப் பார்க்கிறேனு சொல்லு.”
“பால் தருவீங்களா?”
“இம்,தர்றோம்”
அவள் மெல்லத் தலையை ஆட்டினாள். சுபாஷ் ‘கொல்’லெனச் சிரித்தான். “அவள் போயிடுவானு நீ வேலை பார்க்கிறீயானு கேட்டே, அவ பார்க்கிறேன்கிறாள். அவக்கிட்ட நீ என்ன வேலைக் கொடுக்கப்போறே?”
கோபிகா, “என்னோட ட்ரெஸ்களைத் துவைக்கச் சொல்லப்போறேன்.”
“யார இவளைய்யா?”
“ஏன் இவளுக்கு என்னவாம்?”
“அவ அழுக்கு உன்னோட ட்ரெஸ்ல ஒட்டிக்கிறப்போகுது”
“அப்ப பாத்திரம் தேய்க்கச் சொல்லலாம்”
“கரண்டி எதையும் எடுத்து மடிக்குள்ள வச்சிக்கிட்டு போயிடப்போறா”
“இச்சீச்சி, இவளைப் பார்க்க அப்படியெல்லாம் செய்றவ மாதிரி தெரியல…”
சுபாஷ் சீறிட்டான். “அடுத்தத் தெருல வேலைக்காரி நகை நட்டுகள அள்ளிக்கிட்டு போயிட்டாளாம்”
“அப்ப வேண்டாம்” என்றாள் கோபிகா.
“எதையாவது ஒரு வேலைக் கொடுத்துப் பார்ப்போமடி” என்றாள் அவளது தாய் சித்ரா.
“வாசலைச் சுற்றிலும் கூட்டச் சொல்லலாம்” – கண்ணையா.
“என்ன நீ வாசல்கள கூட்டுறீயா?” அவளிடம் குனிந்து கேட்டாள் கோபிகா. நிமிர்கையில் மூக்கைப் பிடித்துகொண்டு நிமிர்ந்தாள்.
“பால் வேணும்.”
“பால் வீட்ல இல்ல. கடை தூரத்தில இருக்கு. நான் போய்ப் பால் வாங்கிக்கிட்டு வாறேன். நீ, வாசலைக் கூட்டிப் பெருக்கு.”
அவள் மெல்ல எழுந்தாள். குழந்தையை மடியிலிருந்து துணியைச் சுற்றித் தூக்கினாள். வாசலில் கிறில் கேட்டை ஒட்டியிருந்த ஒரு சமதளக் கட்டையில் கிடத்தினாள்.
“இந்தா, ஒனக்கு அறிவு எதுவும் இருக்கா, இல்லையா? புள்ளைய இப்படி வெயில்ல படுக்க வைக்கிற. உள்ளே கொண்டுவா’ அதட்டினார் கண்ணையா.
“வேணாம்” என்றாள்.
“சுபாஷ், என் பெட்ல ஒரு மஞ்சக்கலர் டவல் இருக்கும் அதையும் குடையையும் எடுத்துக்கிட்டு வா.” எனக் கண்ணையா சொன்னதும் அவன் வேகமாக வீட்டிற்குள் ஓடி இரண்டையும் எடுத்து வந்தான்.
“இந்தா…” என்றவாறு இரண்டையும் அவள் முன் நீட்டினான்.

அவள் மடிப்புக் கலையாமல் துண்டைக் கட்டையில் விரித்தாள். அதன்மீது குழந்தையைக் கிடத்தினாள். குழந்தைமீது ஈக்கள் மொய்க்காமலிருக்கப் போர்த்தினாள். குடையை விரித்து தலையிடத்தில் வைத்தாள். சேலையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு ஒரு மூலையில் கிடந்த விளக்குமாற்றை எடுத்து வீட்டைச் சுற்றிலும் ஒரு சுற்று வேகமாகக் கூட்டிப் பெருக்கினாள். முந்தானையால் முகத்தில் வழிந்த வியர்வையைத் தொட்டு எடுத்தவாறு வாசலுக்கு ஓடி வந்தாள். குழந்தையை வேகமாகத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு “ பால் வேணும்ங்க..” என்றாள்.

“வா இப்படி. கட்டையில உட்கார். சோறுபோட்டுத்தாறேன் சாப்பிடு..” சித்ரா ஒரு இலையில் சோறு கொண்டுவந்து வைத்தாள்.
“சோறெல்லாம் வேண்டாம் தாயீ. பால்தான் வேணும்…”
“சரி தண்ணியாவது குடி” நீட்டினாள் மூதாட்டி.
“வேண்டாம் தாயீ. பால்தான் வேணும்..”
அவளது உடம்பு வியர்த்துக்கொட்டியது. அவளையும் அறியாமல் உதடுகள் பரிதவித்தன. அவளையே ஒருகணம் பார்த்துக்கொண்டிருந்த சித்ரா வீட்டுக்குள் சென்று நூறு ரூபாய் பணம் எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்.
“பால்தான் வேணும்”
“நூறு ரூபாய் ஆத்தா. தேவைப்படுறப்ப உன் பிள்ளைக்கு பால் வாங்கிக்கொடு”
“காசு வேண்டாம். பால்தான் வேணும்..”
“அரிசி தாறேன். கொண்டு போறீயா?”
“பால்தான் வேணும்.”

“பால் இல்லையே. வாங்கப்போனவ இன்னும் வரக்காணோமே..”
அவளுடைய முகம் ஏமாற்றத்தில் தழும்பியது. குழந்தையை மார்போடு தாங்கிக்கொண்டு மெல்ல நடக்கலானாள்.

“இந்தா, எங்கே போறே. வேலைப் பார்த்திட்டு காசு, சோறு, அரிசி எதையும் வாங்காமல் போனால் என் குடி விளங்குமா. நின்னு பாலை வாங்கிக்கிட்டு போ..”

அவள் நின்றாள். முகத்தைத் திருப்பி கெஞ்சும் முகத்துடன் பார்த்தாள். கடைக்குச் சென்றிருந்த கோபிகா பால் பாக்கெட்டுடன் ஓடி வந்தாள்.

“வேலைய முடிச்சிட்டாளா?”
“இம். முடிச்சிட்டாள். சாப்பிடச் சொன்னேன்.மாட்டேங்கிறாள்”
“தண்ணீ கொடுத்தீயாம்மா?”
“வேண்டானு சொல்லிட்டாடி”
“அம்மா , அவள் பாவம்மா. பணம் கொடுத்து விடும்மா”
“வாங்க மாட்டேங்கிறாளே”
“அம்மா, ப்ரிட்ஜ்க்குள்ள ப்ரெட் இருக்கு. எடுத்துக்கிட்டு வாம்மா. கொடுத்து விடுவோம்”
“அவதான் எதுவுமே வேண்டானு சொல்கிறாளேடி”

கோபிகா கலங்கியவளாய் ஓடிப்போய் பால் பாக்கெட்டை அவளிடம் நீட்டினாள். அதை அவள் கண்ணீர் மல்க வாங்கி மடியில் வைத்துகொண்டாள். குழந்தையை மார்போடு அணைத்தவாறு மெல்ல நடக்கலானாள்.

இரண்டொரு வீதி தாண்டியதும் அவள் தங்கியிருந்த அகதிகள் முகாம் வந்தது. அதையொட்டி ஒரு ஆலமரம் கிளை விரித்து நின்றது. அதற்குள் புதர்கள் காடுகளைப் போல மண்டியிருந்தது. அதற்குள்ளாக அவள் நுழைந்தாள். மரத்தின் வேரிடத்தில் இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்தாள். குழந்தையைக் கால்களுக்கிடையில் வைத்து கால், கைகளை நீவிவிட்டாள். விரல்களால் தலையைக் கோதி சீவினாள். உச்சந்தலையில் குடுமியிட்டாள். புதர் பூக்களைப் பறித்து சூட்டினாள். குழந்தையைத் தூக்கி தலை முதல் பாதம் வரைக்கும் முத்தம் கொடுத்தாள். மார்போடு அணைத்துக் குலுங்கினாள்.

ஒரு புதரினையொட்டிக் குழியொன்று பறித்திருந்தது. அதற்குள் குழந்தையைக் கிடத்தினாள். முகத்தை கிழக்குப் பக்கமாகத் திருப்பினாள். அவளுடைய கைகள் நடுங்கின. ஒரு கையை ஒரு கையால் இறுகப்பிடித்துகொண்டு மண்ணைக் குழிக்குள் தள்ளினாள். மண்கட்டி குழிக்குள் விழுகையில் அடிவயிறு குலுங்கியது. மண்ணைக் கூம்பாகக் குவித்தாள். பால் பாக்கெட்டைப் பற்களால் கிழித்து தலை மேட்டிடத்தில் பீச்சினாள். அவள் நெஞ்சிற்குள் யாரோ குதிப்பதைப் போலிருந்தது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *