அரகலய போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்வதற்கு நான் முயற்சிக்கவில்லை; அந்தப் போராட்டமே உண்மையான எதிரிகளை அடையாளம் காட்டியது
2022 காலிமுகத்திடல் மக்கள் போராட்டமே தனது இராணுவ வாழ்வில் உண்மையான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியது .அந்தப்போராட்டத்தில் நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரங்களை பயன்படுத்தி அவர்களை கொல்வதற்கு நான் முயற்சிக்கவில்லை என்று பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவப் பதவிகளில் இருந்து நேற்று முன்தினம் 31ஆம் திகதி ஓய்வு பெற்ற சவேந்திர சில்வா, அது தொடர்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
2022இல் ஏற்பட்ட மக்கள் போராட்டம் எனது இராணுவ வாழ்க்கையில் சிக்கல்கள் மிக்க ஒன்றாக இருந்தது. அப்போது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதனை எனக்கு அடையாளம் காட்டியது. அரச பாதுகாப்பு படை என்பது வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய மக்கள் படையாகும்.
2022 போராட்டமானது உள்ளக மக்கள் முன்னெடுத்த போராட்டமாகும். அதன்போது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டும் பயன்படுத்துமாறு நான் உத்தரவிட்டேன். இராணுவ துப்பாக்கி தோட்டாவில் சாதாரண அப்பாவி மரணித்துவிடக் கூடாது என்பது எனது எண்ணமாக இருந்தது.நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரங்களை பயன்படுத்தி அவர்களை கொல்வதற்கு நான் முயற்சிக்கவில்லை.
ஆனால் அதிகார மோகம் மிக்க ஆட்சியாளர்கள் கூறுவதை போன்று நான் அரசை காட்டிக்கொடுக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை. வெளிநாடொன்றின் மறை கரமாக இருப்பதற்கோ அல்லது வெளிநாட்டு தூதரகத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் வகையிலான கீழ்த்தரமான ஆசை கொண்டவனாகவோ இருக்கவில்லை. அப்படியென்றால் அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதியான பிரதமரை ஆர்ப்பாட்டக் காரர்களிடம் சிக்கியிருந்த போது விமானப் படையினரை பயன்படுத்தி அவரின் உயிரை பாதுகாத்தது எதற்காக?அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்க வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரை விரட்டியடித்து அந்த வீடுகளை பாதுகாத்தது எதற்காக?
நான்கு நட்சத்திர ஜெனரலாக இலங்கை இராணுவ வரலாற்றில் இரண்டாவது இராணுவ தளபதியாக பணியாற்றிய நான் 2022 மே 31ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 7 மாதங்களே எஞ்சியிருந்த போதும் என்னை இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமனம் செய்தனர். இந்நிலையில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே அப்போதிருந்த ஜனாதிபதி தப்பிச் சென்றார். அப்போத நான் பாதுகாப்பு பிரதானி பதவியில் இருக்கையில் அரச அனுமதியுடன் வெளிநாடொன்றில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றிலேயே கலந்துகொண்டிருந்தேன் .
![]()