கர்தினாலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தச் சதி!
தனது பெயரை பயன்படுத்தி நாமல் குமார என்ற நபர் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்று நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்ற ரஞ்சன் ராமநாயக்க அங்கே வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் இங்கே வந்தேன். இதன்படி என்னிடம் வாக்குமூலங்களை பெற்றனர். எனக்கு எதிராக நபரொருவர் முறைப்பாட்டை செய்திருந்தார். நான் பேராயர் மெல்கம் ரஞ்சித்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் முறைப்பாட்டை செய்துள்ளார். பேராயர் முக்கிய பதவியொன்றுக்கான தேர்தலில் நிற்கவுள்ள நேரத்தில் அவரை அவமதிக்கும் நோக்கில் எனது பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட செயற்பாடே இது.
நான் நிரபராதி என்பதனை விசாரணை பிரிவினரிடம் முன்வைத்தேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக போராடுபவரே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை. அவரின் நற்பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செய்து விசாரணைகளை சீர்குலைக்கவே குறித்த நபர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதுவொரு ஒப்பந்த அடிப்படையிலான செயற்பாடாகவே கருதுகின்றேன்.
![]()