புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்து இல்லை – அவர்களுடன் நெருங்கிய உறவையே பேணியிருந்தார் 

விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

”மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை. போர் இடம்பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலை நடத்தவோ எந்தவொரு தீவிரவாதியும் முற்பட்டிருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கினர். அப்போது எனக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா?

வெலிகடை சிறையில் என்னை அடைத்த தருணத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியொருவர் சிறையில் இருந்தார். அத்தருணத்தில் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்தில் இராணுவத் தலைமையகத்தில் என்மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தவந்திருந்த முரிஸ் என்ற தீவிரவாதியும் நானும் ஒரே பங்கில்தான் அமர்ந்திருந்தேம். அப்போது எனக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா?

அதனால் மகிந்த ராஜபக்சவிற்கு எப்போதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள். மகிந்த ராஜபக்ச, பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவே ஆட்சிக்கு வந்தார். போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்ததை அறிவித்தார். பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மகிநத் ராஜபக்ச புலிகளுடன் நெருங்கிய உறவை அவர் பேணியிருந்தார். அதனால் புலிகளால் அவரத உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *