பிரகீத் எக்னெலிகொட மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு உடல் கடலில் வீசப்பட்டது!;  கோட்டாவின் உத்தரவுக்கமைய நடந்ததென கடற்படை வீரர் தெரிவிப்பு (VIDEO)

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் (முன்னாள் ஜனாதிபதி) கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய அவர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் கடற்படை வீரர் ஆர்.பி.டி.பி.பிரசன்ன பியசாந்த தெரிவித்துள்ளார்.

கடற்படையின் பொறியியல் பிரிவில் கடமையாற்றிய அவர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகவும் குறிப்பிட்டு சுதா கிரியேஷன்ஸ் எனும் தனியார் யூடியூப் சனலொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்கு தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு இலங்கைக்கு வருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமை தமக்கு தெரிந்தே நடந்ததெனவும் ஆனால் அவர் கடத்தப்பட்டு கொல்லப்படும் போது அவர்தான் பிரகீத் எக்னெலிகொட என்பது தனக்கு தெரியாதெனவும் தெரிவித்துள்ளார்.

பெபிலியான விகாரைக்கு அருகில் கைகள் கட்டப்பட்ட ஒருவர் தனது கெப் வாகனத்துக்கு பின்னால் வந்த கெப் வாகனத்தில் ஏற்றப்பட்டதாகவும் தனது கெப் வாகனத்தில் சாரதி உள்ளிட்ட ஐவர் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் அவ்வாறு கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டவரின் அடையாளத்தை தான் அப்போது அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் தன்னை பயணிகள் போக்குவரத்து பஸ் மூலம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு வருமாறு, கடற்படை தலைமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து கெப் வாகனத்திலேயே வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டையில் அமைந்துள்ள 32 பிரிகேட் படைப் பிரிவுத் தளத்துக்கு மாலை 4 மணியளவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போதே கெப் வாகனத்திலிருந்து கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இறக்கப்பட்டதாகவும் அப்போது, அவர்தான் எக்னெலிகொட என்பதை நான் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள பழைய கட்டிடமொன்றுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மூன்று முறை துப்பாக்கி சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் 20 நிமிடங்களுக்குப் பின்னர் தாடை பகுதியில் குண்டு துளைத்த காயங்களுடன் உடல் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

படகில் கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு எருமைத்தீவு கடலில் உடல் வீசப்பட்டதாகவும் இச்செயற்பாடுகள் அனைத்தும் அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் அடிப்படையிலேயே (முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச) முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://youtu.be/ChtMPrm3ei8?si=fYXZIN3Pbob2GFXU

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *