சீனாவில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயில்
மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தது.
மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ எனும் இந்த புல்லட் ரயில் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணித்து சிஆா்450 புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் நிா்ணயித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிவேக ‘சிஆா்400’ புல்லட் ரயிலைவிட இதன் வேகம் அதிகமாக உள்ளது. சிஆா்450 ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கி.மீ. தொலைவுக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடம் வழியே இயக்கப்படும் ரயில்கள் மிகவும் லாபகரமானதாக உள்ளன. பிற வழித்தடங்களில் பெரிய அளவில் லாபம் இல்லை என்றபோதும் அதிவேக ரயில் சேவைகள் மூலம் நாட்டின் தொழில் வளா்ச்சி மேம்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் அதிவேக ரயில்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது.
![]()