முச்சந்தி

சிரியாவின் புதிய தலைமை: சவூதியில் பிறந்து ஈராக்கில் களமாடியவர்!….10 மில்லியனுக்கு அமெரிக்காவால் தேடப்பட்டவர்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்க அரசால் 2013 இல் உலகளாவிய பயங்கரவாதி என்று பட்டியலிட்டு, அவரைப் பிடிக்க 10 மில்லியன் வெகுமதியை அறிவித்தது. சிரியாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் 2024 டிசம்பரில், அல்-ஷராவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பார்பரா ஏ. லீஃப் தலைமையிலான குழு சந்தித்தது மற்றொரு அதிர்ச்சிமிக்க திருப்புமுனையாகும்)
அமெரிக்க அரசால் 2013 இல் உலகளாவிய பயங்கரவாதி என்று பட்டியலிட்டு, அவரைப் பிடிக்க 10 மில்லியன் வெகுமதியை அறிவித்தது. அவர் யாருமல்ல, தற்போதைய சிரிய நாட்டின் கிளர்ச்சிப் படைகளின் தலைவராக இருந்து, இடைக்கால அதிபராக விளங்கும் ஹுசைன் அல்-ஷரா தான்.
சிரியாவில் ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றியதன் பின்னர் 2024 டிசம்பரில், அல்-ஷராவை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பார்பரா ஏ. லீஃப் தலைமையிலான குழு சந்தித்தது மற்றொரு அதிர்ச்சிமிக்க திருப்புமுனையாகும்.
யார் இந்த ஹுசைன் அல்-ஷரா?
அஹ்மத் ஹுசைன் அல்-ஷரா (Ahmed Hussein al-Sharaa) அவரது இன்னோர் பெயரான அபு முகமது அல்-ஜூலானியாகவும் (Abu Mohammad al-Julani) அறியப்படுகிறார். சிரிய அரச எதிர்ப்பு போராளியும் தற்போதைய அரசின் தலைவரும் ஆவார்.
அசாத் எதிர்ப்பு படைகளோடு இணைந்து HTS எனப்படும் ஆயுத இயக்கத்திற்கு 2017 முதல் தலைவராக இருந்தவர். உறுதியான இறுதியான எதிர்ப்பில் முக்கிய பங்கு வகித்து அசாத் ஆட்சியை வீழ்த்தி சிரிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கும் அவரே வழிவகுத்தார்.
1982 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாத்தில் பிறந்த அபு முகமது அல்-ஜோலானி சாதாரண குடும்ப பின்புலத்தை கொண்டவர். அவரது தந்தை பெட்ரோலியம் பொறியாளராக பணியாற்றினார். இவர்கள் 1989 இல் சிரியாவுக்குத் சென்று டமாஸ்கஸ் அருகே குடியேறினர்.
2003 இல் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக ஈராக்கில் அல்-கொய்தாவில் அபு முகமது அல்-ஜோலானி சேர்ந்தார்.
2003 ஈராக் படையெடுப்பிற்கு பின்பு, அவர் ஈராக்கில் அல்-கொய்தாவில் சேர்ந்து ஈராக் கிளர்ச்சியில் மூன்று ஆண்டுகள் போராடினார். 2006 முதல் 2011 வரை அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றி சிறையில் அடைத்தனர். ஆனால் சிரிய உள்நாட்டு போரின் போது அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் சிரிய உள்நாட்டுப் போரில் பங்கேற்க அல்-கொய்தாவின் ஆதரவுடன் 2012 இல் அல்-நுஸ்ரா முன்னணியை உருவாக்கினார். அல்-நுஸ்ரா முன்னணியின் தலைவர் என்ற முறையில், அல்-ஷாரா வடமேற்கு இட்லிப் பகுதியில் ஒரு பெரிய கிளர்ச்சியாளர்கள் தளத்தை உருவாக்கினார்.
அப்போதிருந்து அல்-ஷரா சிரியாவின் எதிர் கால தலைவராக பரவலாகக் கருதப்பட்டார். ஆனாலும் அல்-நுஸ்ராவை இஸ்லாமிய அரசில் ஒருங்கிணைக்கும் அபு பக்கர் அல்-பாக்தாதியின் முயற்சிகளை எதிர்த்தார்.
2016 இல், அல்-ஷரா அல்-கொய்தாவுடனான அல்-நுஸ்ராவின் உறவுகளைத் துண்டித்து, அதை மற்ற அமைப்புகளுடன் இணைத்து அடுத்த ஆண்டு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமை உருவாக்கினார்.
அல்-கொய்தாவுடன் உறவை முறித்துக் கொண்டதில் இருந்து, சிரியாவின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சர்வதேச சட்டப்பூர்வத்தை நாடினார். அத்துடன்
எச்டிஎஸ் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் ஒரு அதிகார நிர்வாகத்தை நிறுவி வரிகளை வசூலித்தல், பொது சேவைகளை வழங்குதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில், அவர் மிகவும் வெளிப்படையாக மிதவாத பார்வையை முன்வைத்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்க எந்த உத்வேகமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக சபதம் செய்துள்ளார்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உருவாக்கம்:
2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் மாகாணத்தில் தங்கள் படைகளை நிறுத்தி அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைகளை பேணி வருகின்றனர்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக அல்-ஷாரா
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, அது உண்மையில்லை என்று உறுதியளித்தார்.
அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் உலகிற்கு வெளிப்படுத்தும்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கிளர்ச்சி படை:
சிரியாவின் முன்னாள் கிளர்ச்சிக் குழுக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு குழுக்களின் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து பிரிவுகளை கலைக்க ஒப்புக்கொண்டதாக நடைமுறை சிரிய தலைவர் அஹ்மத் அல்-ஷாரா கூறியுள்ளார்.
வடகிழக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் தலைமையிலான -அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) குழு இப்போது அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை.
குர்திஷ் தலைமையிலான படைகளிடம் உள்ள ஆயுதங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து ஆயுதங்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டது.
முன்னாள் கிளர்ச்சிப் பிரிவுகள் மற்றும் பஷர் அல்-அசாத்தின் இராணுவத்தில் இருந்து விலகிய அதிகாரிகளைப் பயன்படுத்தி அமைச்சகம் மறுசீரமைக்கப்படும் என்று பிரதமர் முகமது அல்-பஷீர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
சிரியாவின் மிகவும் மேலாதிக்க இராணுவ – அரசியல் சக்தி – அனைத்து ஆயுதக் குழுக்களும் முடிவு செய்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இணைந்தது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை ?
 
டமாஸ்கஸில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு, கிளர்ச்சியின் முக்கிய நபரான முர்ஹாஃப் அபு கஸ்ராவை இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக நியமித்தனர்.
அமைப்பு முன்னாள் ஆட்சிக்கு எதிராக பழிவாங்கவோ அல்லது எந்த மத சிறுபான்மையினரையும் ஒடுக்கவோ செய்யாது என்று உறுதி செய்துள்ளது. புனரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடைவதில் தான் தனது முதன்மையான கவனம் செலுத்துவதாகவும், புதிய மோதல்களில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லை என்றும் கூறியுள்ளது.
நிச்சயமற்ற காலங்களில் சிரியர்கள்:
சிரியாவின் புதிய நிர்வாகத்தில் எந்த சிறுபான்மையினரையும் ஒடுக்காது என்று கூறினாலும், சிரியாவின் வடகிழக்கில் குர்திஷ் மக்கள் நிலைமை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டுப் போரின் பின்னர் எதிர்கால சுனி இஸ்லாமிய ஆட்சி சிறுபான்மையினர் வாழ்க்கை முறையை பாதிக்கும் என்று பலரும் பயந்துள்ளனர். அதே போல் சிரியாக், கிரேக்கம், ஆர்மேனிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் சமூகமும் கலக்கத்தில் உள்ளது. அதேவேளை குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் புதிய தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் என்றும், சிரியா பிரிக்கப்படாது என்றும் கூறியுள்ளது. சிரியாவில் ஐந்து தசாப்த கால அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், எண்ணற்ற குழுக்களிடையே மோதல்களைத் தவிர்க்க முயற்சிக்கும் கடினமான பணியாக புதிய தலைமைக்கும் இருக்கப் போகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button