இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான அமுலைக் கைவிடும் இலங்கை அரசு!

இந்தியாவின் முன்னணி பால் விற்பனை நிறுவனமான அமுல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை பயணிப்பதற்கான முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கை தனது பால் உற்பத்தியை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியில் இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் முதன்மை பால் விற்பனை நிறுவனமான அமுல் ஆகிவற்றின் உதவியை நாடியிருந்தது.
அப்போது, இலங்கையின் அரசுக்கு சொந்தமான பால் நிறுவனமான மில்கோ உள்ளிட்ட பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் பால் நிறுவனம் இலங்கை-இந்திய கூட்டு முயற்சியில் கையகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆனந்தை தளமாகக் கொண்ட குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு உரிமையின் கீழ் அமுல் நிறுவனம் உள்ளது. இது இந்தியாவின் 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
கடந்த அரசாங்கம் இது தொடர்பான ஆரம்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தேசிய மக்கள் சக்தி உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தின் திட்டத்தை முன்னெடுக்காது.
அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, இருதரப்புத் தலைவர்களும், பால் உற்பத்தித் துறையின் அபிவிருத்தி தொடர்பில் ஒத்துழைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இரு தலைவர்களும் தன்னிறைவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையில் பால்வளத்துறையின் அபிவிருத்திக்கான தற்போதைய ஒத்துழைப்பை பாராட்டியதாக விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வுகளின் அடிப்படையில் அமுல் நிறுவனம் ஈடுபடுவது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. புதிய அரசாங்கம் அரச சொத்துக்களை முழுமையாக விற்பனை செய்வதற்கு எதிரானது என்பதால் இத்திட்டம் முன்னெடுக்கப்படாதென தெரிவிக்கப்படுகிறது.
![]()