உள்ளூராட்சித் தேர்தலை மே மாதத்தில் நடத்தவும்

சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலே சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாகவும் எனினும் மே மாதத்தில் தேர்தலை நடத்துவதே பொருத்தமானதாக இருக்குமெனவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், வேட்பு மனுக்களை இரத்துச் செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு மூன்று வாரம் கடந்துள்ள போதும் புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டது. அந்த முடிவு எடுத்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன, ஆனால் அரசாங்கம் இன்னும் ஒரு சட்ட மூலத்தை அமைச்சரவையில் முன்வைக்கவில்லை. சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையால் சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், இன்றைய கூட்டத்தின் அறிக்கை டிசம்பர் 30 ஆம் திகதி அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர் டிசம்பர் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் ஜனவரி 14 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது ஏனெனில் அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன் இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும்.

ஜனவரி 14 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இந்த சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மக்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும். அந்த இரண்டு வாரங்கள் கடந்ததும், யாரும் வழக்குப் போடாமல் இருந்தால்தான், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியும். அதாவது பெப்ரவரி 5 ஆம் திகதி வரை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

பெப்ரவரி 5 ஆம் திகதி விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்டாலும், சபாநாயகர் கையெழுத்திட இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதாவது இந்த சட்டமூலம் சட்டமாகி பெப்ரவரி 7 திகதி வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படும். தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்தாலும் பெப்ரவரி 9 ஆம் திகதியே திகதியை அறிவிக்க முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பெப்ரவரி 26 முதல் 5 வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தலுக்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் தான் புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தல் திகதியை நிர்ணயம் செய்யும் போது அரசாங்கம் மறந்த ஒரு விடயம் உள்ளது. சாதாரணத்தரப் பரீட்சை மார்ச் 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இதனால் அவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் வேட்பு மனுக்களை ஏற்று ஒரு மாதத்தின் பின்னர் மே இறுதியில் உள்ளூராட்சி தேர்தலை எவ்வித தடையும் இன்றி நடத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *