மியன்மார் அகதிகள் கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில்!
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை (23) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு சொந்தமான இரு பஸ்களில் ரோஹிங்யா அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றுக் காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மிரிஹான முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு இந்த அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் அன்றைய தினம் மாலை இவர்கள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த அகதிகளை மிரிஹான இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை (21) அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததன் காரணமாக அவர்கள் மீள திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் தற்போது முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
![]()