தமிழ் எம்.பி.க்களும் பட்டங்களை சமர்ப்பித்து தாங்கள் உத்தமர்கள் எனக் காட்ட வேண்டும்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது பட்டம் மற்றும் தமது கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து தங்களை உத்தமர்கள் என காட்டவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்குவரும்போது- தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்டம் பெற்றவர்கள், கல்வியாளர்கள் என்றும் கடந்த அரசாங்கம் போல் அல்லாமல் நாங்கள் கல்விமான்களை உள்ளடக்கியவர்கள் என்ற ரீதியில் கூறி வந்த நிலையில் ஆட்சிக்கு வந்தவர்களின் பட்டப்படிப்புகள் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் துரஸ்டவசமாக சபாநாயகர் இன்று இராஜினாமா செய்துள்ளார்.
நாட்டில் சில வேளைகளில் கலாநிதிப் பட்டங்கள் பணம் கொடுத்து பல்கலைக்கழகங்களில் பெறப்படுவது வழமையாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அதிகாரிகளும் கூட கலாநிதி பட்டங்களை பணம் கொடுத்து பெற்றுள்ளதாக அறியகூடியதாக உள்ளது. அந்தவகையில் வெளிநாடுகளில் பட்டம்பெற்று இன்று நாங்கள் படித்தவர்கள் என கூறிக் கொண்டு தங்களது பட்டங்களை தங்களுடைய பெயருக்கு பின்னால் வைத்திருப்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டிய கால கட்டமாக இருக்கின்றது
உள்நாட்டிலே பட்டம் எடுத்தவர்களின் பட்டப்படிப்புக்கள் தற்போது கேள்விக்குட்படுத்தப்படுவதாக தெரியவில்லை ஆனால் வெளிநாடுகளிலே பட்டம் பெற்றவர்களது பட்டங்களே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
எனவே கடந்த காலத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை படிக்காதவர்கள்,முட்டாள்கள் , நான் படித்தவன் பட்டங்கள் இருக்கின்றது என வீரவசனங்கள் பேசிய வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பித்து தங்களை உத்தமர்கள் என காட்டவேண்டும் என்றார்.
![]()