உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார்?

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தரின் ஐபோன் விழுந்த சம்பவம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக ஐபோனையும் போட்டுவிட்டார். உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர், சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று கூறி ஐபோனை தர மறுத்துவிட்டனர்.

செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து பேசுகையில், “உண்டியலில் விழுந்த ஐபோனில் முருகன் யாருடன் பேசப் போகிறார் என தெரியவில்லை. வள்ளியிடம் பேசுவார் போல.

உண்டியலில் காணிக்கை போட்டவர் செல்போனை இடது கையில் வைத்துக் கொண்டு காணிக்கையை போட்டிருக்கலாம். ஆனால், உண்டியலில் விழுந்தது யாருடைய போன் என்று உறுதி செய்துவிட்டால் அதை கொடுப்பதில் என்ன இருக்கிறது?

பாளையத்தம்மன் படத்தில் உண்டியலில் போட்ட குழந்தை கோயிலுக்கே சொந்தம் என்பது போல, ஒரு வெடிகுண்டை போட்டு விட்டால், குண்டு எங்களுக்கு தான் சொந்தம் என சொல்லுவார்களா? காலக்கொடுமை” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *