அரசின் தீர்மானம் தொடர்பாக அநுரகுமார  சஜித் சந்திப்பு!

பாராளுமன்றத்தில் பல குழுக்களை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற குழுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

மேலும், குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிகரிப்பது மற்றும் எதிர்க்கட்சிக்கு தலைவர் பதவிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் மிகவும் சுமுகமான ஒன்றாக அமைந்ததுடன், சஜித் பிரேமதாசவின் பல யோசனைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரேரணைகளை தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பதில் வழங்குவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்துச் செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட சிலரை மகிழ்விப்பதற்காக இவ்வாறு குழுக்களை நியமிப்பதால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு உணர்ந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், துறைவாரியான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பாராளுமன்றக் குழுக்கள் அமைக்கும் முறை மிக விரைவாக மாற்றப்படும். ஒரே மாதிரியான விடயங்களுக்கு பல துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற விடயங்களை ஒரு குழுவின் கீழ் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *