இலங்கையில் கரையொதுங்கிய படகிலிலிருந்து 5 அகதிகளின் சடலங்கள் நடுக் கடலில் வீச்சு
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகு வெள்ளிக்கிழமை (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதேநேரம் இந்தப் படகில் 120 பேர் பயணித்திருந்த நிலையில் அதில் ஐவர் பசி காரணமாக நடுக் கடலில் படகில் உயிரிழந்தமையால் அவர்களது உடல்களை கடலில் வீசியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.
மியன்மார் நாட்டின் ரோஹிங்யா இனத்தை சேர்ந்த 115 பேர் படகு மூலம் இலங்கை கடற்பரப்பின் முல்லைத்தீவு பகுதியில் வியாழக்கிழமை (19) கரையொதிங்கிய போது கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து இவர்களை மீட்டனர்.
இவர்கள் வெள்ளிக்கிழமை (20) திருக்கோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை இடம் பெற்றுது.
படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.
இவர்களை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் படகு ஓட்டுனர், உதவியாளர் என 12 நபர்களை ஆட்கடத்தல் எனும் பெயரில் விசாரணை இடம் பெறுவதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் படகு ஓட்டுனர் உதவியாளர் என 12 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிசாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்க வைப்பதற்காக ஜமாலியா முஸ்ஸிம் மகா வித்தியாலயம் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களுக்கான மதிய உணவை ஏ.எச். ஆர்.சி. தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா. பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அங்கு வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகுகளில் வந்தவர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை நடுக் கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்தக் குடும்பத்தில் ஒருசிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிசாருடனும் கடற்படையினருடனும் கலந்துரையாடியிருந்தார்.
![]()