’13’ஆவது திருத்தம் குறித்து அநுரவிடம் மோடி வலியுறுத்தாதது ஏன் ?
நாட்டில் உள்ள அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என சொல்வதுதான் சாலச் சிறந்தது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சியில் உள்ள யாழ். ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோது இந்திய தரப்பு 13 ஐ நேரடியாக வலியுறுத்தாததன் பின்னணி என்னவாக இருக்கும் என அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது,
13 என்று பிரித்து சொல்கின்ற போது சில வேளைகளில் அதிலே ஒரு மயக்கம் ஏற்படும். 13 என்பது ஏதோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்றும் அது ஒரு பின்னிணைப்பு என்பதைப் போலவும் சிலர் சிந்திக்ககூடும். இதனாலே ’13’ என்று சொல்வதை நாங்கள் தவிர்த்து இருக்கின்றோம்.
நாட்டில் உள்ள அரசியல் அமைப்பை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த வேண்டும். 13 ஆம் திருத்தமும் அதற்குள் அடங்கும். மாறாக 13 என்று, அதை வேறாக சுட்டி காட்டினால் அது ஏதோ அரசியலமைப்பில் இல்லாத ஒன்று என்றும் வெளியிலே இருக்கின்ற ஒன்று என்று என்ற தோற்றப்பாடு ஏற்படும். ஆகையினாலே இந்திய அரசாங்கமும் தங்களது சொற்பதத்தை மாற்றிக் கொண்டது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன்.
13 மட்டுமல்ல 16 ஆம் திருத்தமும் மிகவும் முக்கியமானது. எங்களது தமிழ் மொழி உரிமைகள் சம்பந்தமான விடையங்கள், மற்றைய திருத்தங்களும் முக்கியமானவை. ஆகையினாலே நாட்டில் உள்ள அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என சொல்வதுதான் சாலச் சிறந்தது என்பதுதான் எனது கருத்து என தெரிவித்தார்.
தமிழரசி கட்சியில் தலமைத்துவம் சம்பந்தமான வழக்கு ஏற்கனவே இடம்பெற்று வருகிறது. தற்போது கட்சிக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே என ஊடகவியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியது போது, அது தொடர்பில் தனக்கு தெரியாது என்றும் இன்று காலை (19) பத்திரிகை மூலமே அதை பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
![]()