யாழில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 110 பேர் பாதிப்பு; 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கல்

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று புதன்கிழமை (18) நண்பகல் வரையான கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும், யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (17) வரை ஏறத்தாழ 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
![]()