முச்சந்தி

யாழில் வங்கிக் கணக்கிலிருந்து 2 1/4 இலட்சம் ரூபா திருட்டு ; முறைப்பாட்டை ஏற்க பொலிஸார் மறுப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் பொலிஸார் அவரின் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காரைநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சனிக்கிழமை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த, அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்கவே அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.

சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள், கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரியுள்ளனர். அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.

அதன் பின்னர், அவரது கணக்கில் இருந்து5 தடவைகள் 40 ஆயிரம் ரூபாவும், அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபா, 6 ஆயிரம் ரூபா என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணத்தை பெறப்பட்டுள்ளது.

தனது கணக்கு இலக்கத்தில் இருந்து பணம் பெறப்பட்டமை தொடர்பில் தொலைபேசிக்கு குறுந் தகவல் வந்ததை அடுத்து, வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது, பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு வங்கி அலுவலகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால், யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, அதனை உங்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதனால் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்ற போது, வங்கி மானிப்பாய் பகுதி என்பதால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற போது, வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்ற போது, முறைப்பாட்டை எழுத தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இல்லை. பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த பொலிஸ் நிலையமும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button