தையிட்டி விகாரையை உடனடியாக அகற்றவும்; வெளிச்ச வீட்டிலிருந்து கடற்படை வெளியேற வேண்டும் 

காங்கேசன்துறை தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானம் அகற்றப்படுவதுடன் பருத்தித்துறை வெளிச்சவீட்டை ஆக்கிரமித்துள்ள கடற்படையினரை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது .

யாழ்மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களை வழங்கும்போது ஏழை மக்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது விசேட கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு – உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் திட்டத்தின் கீழ் யாழ் நகரத்திற்காக 2019 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிப்பதில் இடம பெற்ற முறைகேட்டினால் யாழ் நகர மக்கள் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இம் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார்களின் கணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்படவேண்டும்.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள

விறாச்சிகுளம் தலவைக்குளம் நெற்கொழுகுளம் ஆகிய மூன்று குளங்களதும் நீர்மட்டத்தை ஆபத்தற்ற அளவில் பேணக்கூடிய வகையில் வெள்ள வாய்க்கால் அமைத்தல் வேண்டும்.

மூர்க்கம் கடற்கரை முனைகடற்கரை கொட்டடி கடற்கரை சுப்பர்மடம் இன்பர்சிட்ட கடற்கரை சக்கோட்டை கடற்கரை திக்கம் கடற்கரை கொத்தியால் கடற்கரை றேவடி கடற்கரை ஆதிகோவிலடி கடற்கரை தொண்டமனாறு கடற்கரை பலாலி கடற்கரை சேந்தான்குளம் கடற்கரை மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.

பருத்தித்துறை வெளிச்சவீட்டைச் சூழவும் சுமார் 500 மீற்றர் பரப்பினை கடற்படையினர் கடந்த 1996 ஆம் ஆண்டு தொடக்கம் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடற்தொழிலாளர்களது மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கோரியடியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி கடற்தொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்குரிய வகையில் குறித்த வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதிகளை மீனவர்களது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. யினால்முன்வைக்கப்பட்டுள்ளன .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *