தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை விடயத்தை கட்சியே தீர்மானிக்கும் ; தனிமனிதனாக முழு ஆதரவளிக்கிறேன்
தமிழ் கட்சிகளின் ஒற்றுமைக்கான ஆணையை மக்கள் தந்துள்ளபோதும் தனிமனிதனாக என்னால் ஒன்றும் செய்யமுடியாது. கட்சியின் மத்திய மற்றும் அரசியல் குழுக்களின் தீர்மானங்கள் அவசியமாகின்றன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து பயணிக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது.
ஆனால், எங்களை பொறுத்தவரைக்கும் எங்களுடைய மத்திய குழு மற்றும் அரசியல் குழுவிலே கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்பாக சேர்ந்து செயற்படுதல், இணைந்து பயணிப்பது தொடர்பான விடயங்களை பற்றி பேசலாம். நாங்கள் யாரையும் வெளியில் விடவில்லை.
இப்போதும் ஒற்றுமையாக பலமாக செயற்படுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தேர்தலுக்கு முன்னரும் பகிரங்கமாக கோரிக்கையை முன்வைத்தவர்கள் எங்களுடைய கட்சியினர்தான். பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்றபோது எல்லா மேடைகளிலும் அதனை தெளிவாக கூறியிருக்கிறேன்.
எங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்கும் கூட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் கொண்டுசெல்வதற்கான ஆணையை தாருங்கள் என்று கேட்டிருந்தேன்.
அந்த ஆணையை மக்கள் தந்திருக்கிறார்கள். எனினும், தனி மனிதனாக நான் அதனை செய்ய முடியாது. மத்திய குழு மற்றும் அரசியல் குழுவின் கூட்டு முடிவின் பிரகாரம், அந்த ஒற்றுமைக்கான பாலத்தையும் பயணத்தையும் மேற்கொள்வோம்.
சபாநாயகரின் இராஜினாமா
சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
எனினும் அவர் அந்த பதவிக்கு உரியவர் அல்ல என்று சிலர் அடையாளப்படுத்துவதன் காரணமாக பெருந்தன்மையோடு ஜனநாயக முறைப்படி தனது கட்சியையும் மக்களையும் கருத்தில் கொண்டு தனது நல்ல மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கோடு இராஜினாமா செய்திருக்கிறார்.
இது வரலாற்றில் முன்னுதாரணமாகும். இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு இடையில் அவர் பெற்ற பட்டம் உண்மையாக இருந்தாலும் கூட அந்தப் பட்டம் உறுதிப்படுத்தப்படும் வரை தான் விலகியிருப்பேன் என்று கூறுவது மிகப் பெரும் ஜனநாயகமாகும். அந்த வகையில் சபாநாயகர் மேற்கொண்ட விடயத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
![]()