ஒரு லட்சம் தமிழர்களும் இலங்கை திரும்புவார்களா?
தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்குரிய வாழ்வாதார, வதிவிட உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரித்தானிய தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அதற்கும் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தமிழகத்தில் அண்ணளவாக ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்குரிய வாழ்வாதார, வதிவிட உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையால் அதிகளவில் வருகின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டிருகின்றோம்.
மேலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இளையோருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டபோதும் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அவற்றை எதிர்காலத்தில் விரைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்கின்றோம்.தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே அபிவிருத்திகளைச் செய்து முடிக்கலாம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.நா. முகவர் அமைப்புக்கள் ஊடாக பிரிட்டன் அரசாங்கம் கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றிகளையும் தெரிவித்தார்.
![]()