உள்ளூராட்சித் தேர்தலை இரத்துச் செய்ததாக ரணிலுக்கு எதிராக கிறிமினல் குற்றச்சாட்டு?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வெற்றிடத்தை மறைக்கும் நோக்கில் தன்னிச்சையாக 2023 ஜனவரி கடைசி வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்து செய்ய தீர்மானித்ததன் காரணமாக, 72 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்பதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க தாமாகவே முன்வந்து அவற்றை கையளிக்க வேண்டுமெனவும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

‘முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கிறிமினல் குற்றச்சாட்டுகள்’ எனும் உள்ளடக்கத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர், சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சகல கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பாரிய ஊழல் மற்றும் நிதி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொலையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கருக்கலைப்பு இதுவெனவும் 72 கோடி ரூபாவையும் மீட்பதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22 மாதங்களுக்கு முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய பிரேரணைகளை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மாற்றத்தை மீட்சியாக மாற்றும் இந்த முடிவு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வெற்றிடத்தை மறைக்கும் நோக்கில் தன்னிச்சையாக 2023 ஜனவரி கடைசி வாரத்தில் நடத்தப்படவிருந்த தேர்தலை இரத்து செய்ய தீர்மானித்ததன் காரணமாக, அரசாங்கம் 72 கோடி ரூபாவை வீண் விரயம் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி இதுவரை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அன்றைய உள்ளூராட்சித் தேர்தலுக்கான மொத்த மதிப்பீடு 8 பில்லியன் ரூபாவாகும். இதன் மூலம் நியாயமான காரணமின்றி வீணாகும் மொத்தப் பணமானது எதிர்பார்த்த மொத்த செலவில் 10 வீதம் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த வரம்பற்ற செல்வம் என்பது ஆட்சியாளர்கள் தங்கள் சொத்துக்களின் வருமானத்தில் இருந்து சம்பாதித்த பணமோ அல்லது அவர்களது குடும்பக் கணக்கில் இருந்து ஒதுக்கப்பட்ட பணமோ அல்ல, மாறாக மக்களின் வரிப்பணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவையும் ஆணையாளர்களையும் மிரட்டி, உயர் நீதிமன்றத்தையும், தேர்தலை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகளையும் அவமதித்து, தேர்தலுக்கு பணம் இல்லை என்று கூறி, அநாகரீகமான அறிக்கைகளை வெளியிட்டார்.

தனது சொல்லப்படாத அரசியல் மோகத்தைப் போக்கிக் கொள்ள விரும்பிய ஜனாதிபதி, தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பது அரசியல் ரீதியாக மிகக் கேவலமானது. ஜனநாயக அர்த்தத்தில் நியாயமான காரணமின்றி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது. இது பட்டப்பகலில் நடக்கும் பொருளாதாரக் கொலை என்பதும், கூட்டு ஊழலுக்குப் பிறகு அரசியல் கருக்கலைப்பு என்பதும் இப்போது தெளிவாகிறது.

அரசு திறை சேரிக்குச் சொந்தமான வரிப் பணம் 72 கோடி ரூபா தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 80,672 வேட்பாளர்களுக்காக செலவு செய்து வீணடித்த தொகை இது என்பதை யாரும் மறுக்க முடியாது. தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தவர்கள் இரண்டு வருடங்களாக செலுத்திய கட்டுப்பணம் 18 கோடி ரூபா மாத்திரமே. அதுவே இந்த பொருளாதார கொலையின் கொடூரத் தன்மையை அளவிடுவதற்கான சான்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத்திய வங்கிக் கொள்ளை, சீனி வரி மோசடி, விசா மோசடி போன்ற எமது அரசியல் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குற்றங்களில் உள்ளுராட்சித் தேர்தல் கொள்ளையாகவும் இதனை உள்ளடக்கி, அரசியலமைப்பு ரீதியாக எந்த அரசியல் சலுகைகள் பெற்றாலும் பொறுப்பானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அரசுக்கு வரி கட்ட முடியாமல், கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல், மின் கட்டணத்தை கட்ட முடியாமல் ஆயிரக்கணக்கான குடிமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில், இவ்வளவு பெரிய தொகையை செலவிட்ட அரசியல் அயோக்கியர்களுக்கு தண்டனை வழங்குவது கடமையும் பொறுப்பும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் உரிய முடிவை எடுத்த ஆட்சியாளர்களிடம், முறைகேடாக பயன்படுத்தப்பட்ட இந்த 72 கோடி பொதுச் செல்வத்தை மீட்டுத் தரக் கோரி, சட்ட நடவடிக்கை எடுக்க, குடிமக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமின்றி, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இந்த பொருளாதாரக் கொலைகாரர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதுடன், பாதிக்கப்பட்ட 22 மில்லியன் மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்பதே வரி செலுத்தும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கு முன் ரணில் விக்ரமசிங்க வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மக்களிடம் திருப்பிக் கொடுத்து அரசியல் வரலாற்றில் ஒரு நாகரீக, கலாசார அத்தியாயத்தை சேர்க்க அவர்களுக்கு போதிய கால அவகாசம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *