எமக்குரியதை வழங்க வேண்டும்; அநுரவின் அரசாங்கத்தை தமிழர்கள் நம்புகிறார்கள்

எமக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதோ, ஆக்கிரமிப்புக்களை கேள்விக்குள்ளாக்குவதோ, மொழி உரிமை மற்றும் நீதியை கேட்பதோ, இனவாதமல்ல, அது எமது சுதந்திர குரல். நாங்கள் சிங்கள சகோதரர்களுக்கு எதிரானவர்களல்ல, நாட்டுக்கு எதிரானவர்களல்ல, ஆனால் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

அரசின் கணக்கு வாக்குப்பதிவு மீதான மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும், இறைவனுக்கும், எனது கட்சிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.காலம் காலமாக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, தமிழ் மக்களுக்காக போராடிய எமது தமிழ் உறவுகளுக்கும், தமிழ் தேசிய தலைவருக்கும் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.

கொடிய யுத்தத்தினால் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார்கள்.இன, மொழி, நில உரிமைகளில் வேறுப்படுத்தப்பட்டார்கள்.அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் நம்பிக்கையான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தனது கொள்கை உரையில் இன, மத, மொழி பேதமற்ற சிறந்த நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளமைக்கு நன்றி . இருப்பினும் எமது எதிர்காலம் மற்றும் அரசியல் தொடர்பில் காத்திரமாக ஏதும் குறிப்பிடாததையிட்டு கவலை .

எத்தனையோ இழப்புக்களை சந்தித்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ள எமது சமூகம் போரின் பின்பு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தோற்றம் பெற்றுள்ளன. பலர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர். இவர்களின் நலன் கருதி அடிப்படையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வளங்கள் காணப்படுகின்ற போதும் இந்த மாவட்டம் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளது. ஆகவே மாவட்ட பொருளாதார முன்னேற்றத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு, படுவான்கரை பிரதேசம் வலுவற்ற செயற்திட்டத்தில் உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் இதற்கான சிறந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களை போன்றல்லாது அபிவிருத்தி செயற்திட்டங்கள் பாரபட்சமின்றிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.தமிழ் மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த உரிமைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.தமிழர்களின் மொழி உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.அத்துடன் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான முன்னேற்றங்களின் ஊடாகவே எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.

எமக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதோ, ஆக்கிரமிப்புக்களை கேள்விக்குள்ளாக்குவதோ, மொழி உரிமை மற்றும் நீதியை கேட்பதோ, இனவாதமல்ல, அது எமது சுதந்திர குரல்.இவ்விடயத்தில் அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.நாங்கள் சிங்கள சகோதரர்களுக்கு எதிரானவர்களல்ல, நாட்டுக்கு எதிரானவர்களல்ல, ஆனால் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர்கள். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *