முச்சந்தி

பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக… நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆட்சி கவிழ்ந்தது!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் பிரதமர் மிஷேல் ஆட்சி கவிழ்ந்த பின்னர் பிரான்சின் அரசியல் சூழலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது)

1962-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறை. தற்போது பிரான்ஸில் நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பு, ஐரோப்பிய யூனியனையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரு நாட்களுக்கு முன்பாக பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியேர் (Michel Barnier) தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

பிரான்ஸில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இமானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில், அதிபரின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.

இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்று, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிஷேல் பார்னியர் பிரதமரானார்.

மிஷேல் பார்னியர் ஆட்சி:

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்ததால், ஆட்சியை பறிகொடுத்தார்.

இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தீவிர வலதுசாரி ஆட்சி தோல்வி:

தீவிர வலதுசாரி ஆதரவுடன், 577 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மையான 331 எம்.பி.க்கள், வலதுசாரி அரசாங்கத்தை வெளியேற்ற வாக்களித்தனர். 1962இல் சார்லஸ் டிகோல் அதிபராக இருந்தபோது ஜார்ஜஸ் பாம்பிடோவின் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு பிறகு தற்போது பார்னியேரின் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழ்வதை அனுமதிக்க முடியாது எனவும் அதிபர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் அடுத்த பிரதமர் யார், அவரை எவ்வளவு விரைவில் அதிபர் நியமிப்பார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது புதிய பிரதமர் தெரிவில் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு மற்றும் அதிபரின் கூட்டாளியான ஃபிராங்கோயிஸ் பெய்ரூ ஆகியோர் உள்ளனர். அதேநேரத்தில் பிரான்ஸ் அரசியலில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் உலக நாடுகளை பாரியளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மூன்று மாத பிரதமராக:

பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடிச் சூழல், அந்நாட்டை பெரியதொரு அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்குள் நாட்டை தள்ளியிருக்கிறது. இது பிரான்ஸ் மக்களையும் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பிரான்சின் அரசியல் சூழலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. பிரான்ஸின் அரசியல் கொந்தளிப்பு, அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை. இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதன் காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுதான் பிரான்ஸ்.

முதலாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. ஜெர்மனியும் பிரான்ஸும் பாரம்பரியமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தியல் மற்றும் அரசியல் திறன்களின் முன்னோடிகள் என்றே பார்க்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய சிதைவு ?

தற்போதையை சூழலில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை நிலைநிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை மற்றும் வலிமையின் நிலைப்பாடு இந்த ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர் என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்நாட்டு அரசியல் கொந்தளிப்புகளால் திசைத் திருப்பப்பட்டிருப்பது பிரான்ஸ் மட்டும் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. பிரான்ஸில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடிச் சூழல், அந்நாட்டை பெரியதொரு அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்குள் தள்ளியிருக்கிறது.

ஜெர்மனியிலும் சமீபத்தில் அதன் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, 2025 பிப்ரவரியில் அந்நாடு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமை தற்போது சிதைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால்தான் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் கலக்கத்தில் உள்ளது

இது பிரான்ஸ் மக்களையும் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சின் அரசியல் சூழலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

அதிபர் மேக்ரான் பதவி விலகுவாரா?

பிரான்ஸின் அரசியல் சட்டப்படி இன்னும் ஒரு வருட காலத்துக்கு பிரதமர் தேர்தலை நடத்த முடியாது. அதுவரை பார்னியர் இடைக்கால பிரதமராக இருக்கலாம். அல்லது அதிபர் மேக்ரோன் புதியவர் ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம். என்றாலும், அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது மூன்று பரஸ்பர எதிர் அரசியல் தொகுதிகளாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில், பிரான்ஸில் மேற்கொள்ளப்பட இருக்கும் சீர்திருத்தங்களும், புதிய பட்ஜெட்டுகளும் முடக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.

இதனிடையே, வரும் 2027-ம் ஆண்டு பிரான்ஸ் அதிபரின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், முன்கூட்டியே அதிபர் தேர்தலை மேக்ரான் நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அதேவேளை அதிபர் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை இப்போது எதிர்க்கட்சிகளிடம் வலுத்து வருகின்றன. இது பிரான்ஸின் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஒருவேளை அதிபர் மேக்ரானும் ராஜினாமா செய்தால், அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக அடுத்து பிரான்ஸில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, அந்நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button