தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4 லட்சம் கோடி ரூபாவை பெறுவதற்கு அநுர முயற்சி

கடந்த அரசாங்கங்களை போன்றே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடன் பெறுவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன்(4 லட்சம் கோடி) ரூபா கடன் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனவாத செயற்பாடுகளுக்கு நாங்கள் என்றும் எதிரானவர்கள். என்று பாராளுமன்றத்துக்கு வந்து குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், இனவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

அரச செலவுகளை குறைத்து ஊழல் மோசடிகளை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தது.ஆனால் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான பெரும் தொகை நிதி ஒதுக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறே செலவிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கடன் பெறுவதற்கு ஜனாதிபதி தேவையில்லை என்று குறிப்பிட்டார். தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன் (4 லட்சம் கோடி) ரூபா கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

கடன் சுமைகளினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று நாட்டு மக்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

தேசிய கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய சேவையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தொழில் படையினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகவே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பயனாளர்களுக்க நியாயம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button