முச்சந்தி

வடக்கு கிழக்கை இணைப்பது தமிழ் பேரினவாத சிந்தனை

வடக்கு , கிழக்கை இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி.யான கிட்ணன் செல்வராஜ், எமது மக்கள் ஈழவாத கருத்தியலுடன் ஒன்றிணைந்து 30 வருடகால போராட்டத்தில் போராளிகளானார்கள். ஆனால் தமிழ் பேரினவாத சிந்தனையுடையவர்கள். 30 வருடகால போர் வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.

எமது மலையக சமூகம் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். உரிமைகள் மறுக்கப்பட்டு வெறும் சலுகை கோட்பாடுகளுக்குள் மாத்திரமே மலையக சமூகம் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் எம்மையும் இணைத்துக் கொண்டு அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மலையக பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி கொள்கையுடைன செஞ்சட்டை அமைப்பை ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் இருந்து நடராஜா என்பவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி அமைப்பினை ஆதரிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமையை பறித்தது. இதன் பின்னர் மலையக மக்கள் நாட்டுக்குள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு பெருந்தோட்ட மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியது.

கலவரத்தின் பின்னர் ரெட்பானா தொண்டு நிறுவனத்தின் ஊடாக வன்னி, கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் எமது மக்கள் ஈழவாத கருத்தியலுடன் ஒன்றிணைந்து 30 வருடகால போராட்டத்தில் போராளிகளானார்கள். ஆனால் தமிழ் பேரினவாத சிந்தனையுடையவர்கள், 30 வருடகால போர் வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும் , வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button