சபரிமலையில் கனமழை: பக்தர்கள் வருகை குறைவு

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, சபரி மலையில் அதன் தாக்கம் இருக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து, பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்தபடி, நேற்று முன்தினம்(நவ., 30) மாலை, 6:30 மணிக்கு துவங்கிய சாரல் மழை, இரவு வலுத்தது. நேற்று காலை சாரல் மழை தொடர்ந்த நிலையில், 11:00 மணிக்கு பின் கனமழை தொடங்கியது.

இதனால் மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர்.

மழையால் பாதையில் சறுக்கல் ஏற்பட்டதால், பக்தர்கள் மெதுவாகவே ஏற முடிந்தது. பெரிய நடைப்பந்தலில் நேற்று கியூ காணப்படவில்லை. பக்தர்கள் உடனடியாக தரிசனம் முடித்து ஷெட்டுகளில் தஞ்சமடைந்தனர். ஏராளமான பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க பாலிதீன் கோட் அணிந்து வந்தனர்.

சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், 40 கி.மீ., வேகத்தில் காற்று வீச கூடும் என்றும், 11.55 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று மதியத்துக்கு பின் மழை மேலும் வலுத்தது.

புயல் காரணமாக தமிழக பக்தர்கள் கணிசமாக குறைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மழை தீர்ந்த பின் மற்ற நாட்களில் வரக்கூடும் என்பதால் அப்போது நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவசம் போர்டு கருதுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.

இதற்கிடையே, சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது, கையில் கம்பு எடுக்கக் கூடாது என, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகளை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *