இந்தியா

கடலில் சிக்கிய கடலூர் மீனவர்கள்; ஹெலிகொப்டர் மூலம் மீட்ட இந்திய கடலோர காவல் படை

மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து நடுக்கடலில் சிக்கி தவித்த கடலூர் மீனவர்கள் உட்பட 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகொப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

கடலூரில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள் உட்பட 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளநிலையில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன்வளத் துறையினர் அறிவித்திருந்த நிலையில்இ அவர்களின் எச்சரிக்கையையும் மீறி தைக்கால்தோனித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூற்ப்படுகிறது.

2 நாட்டுப்படகுகளில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை கடலுக்கு சென்ற நிலையில் கடல் மிகவும் சீற்றத்துடன் இருந்ததால், இவர்களது ஒருபடகு கடலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதில் மணிக்கண்ணன் (35), சாமிதுரை (61), மணிமாறன் (30), தினேஷ் (29), சற்குணன் (23) ஆகிய 5 பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில் 5 பேரும் தமிழ்வாணன் (37) என்பவரது படகில் ஏறிக்கொண்டனர்.

ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 6 பேரும் ஒரே படகில் வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து கடல் நடுவே உள்ள சிறிய அளவிலான தனியார் கப்பல் இறங்குதளத்தில் 6 பேரும் இறங்கினர்.

இதுகுறித்து மீன்வளத் துறைக்கு தகவல் கொடுத்த அவர்கள் தங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் இருந்ததால் படகு மூலம் அவர்களை மீட்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் கடலில் மீனவர்கள் சிக்கியுள்ளது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு விரைந்து சென்றது.

கப்பல் இறங்குதளத்தில் இருந்த 6 மீனவர்களும் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டு கடலூர் சித்திரைப்பேடை கடற்கரை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல அந்த இறங்குதளத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.