தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்-கனடாவிலும் தமிழ்த்தேசியம் பேசப் போகின்றனரா?
தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்மராட்சி-நாவற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்படி வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
தமிழ் மக்கள் அழிவுப்பாதை நோக்கி இட்டுச் செல்லப்படுகின்றனர். இதனை எம் மக்கள் உணர வேண்டும். எம் மக்களை இவ்வளவு காலமாக வழிநடத்திய தமிழ்த்தேசிய வாதிகள் சாதித்தது ஒன்றே ஒன்று தான்.அது எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் அந்த சாதனை.
70வருடங்களாக போராடி உயிர்களை-உடைமைகளை -பல தலைமுறைகளின் எதிர்காலத்தை இழந்தது எமது சொந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதற்காகத் தானா?
தமிழர் இன்றி தமிழ்த் தேசியம் சாத்தியப்படாது.யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்
9ஆக இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது ஆறாக குறைவடைந்துள்ளது.இந்த ஆறு மூன்றாக குறைவடைய வெகு காலம் தேவைப்படாது.
எனவே மக்கள் இந்தத் தேர்தலில் தேடலுடனும்-தெளிவுடனும் வாக்களிக்காவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.