சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்; மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் தோற்கடிப்போம்
நாட்டை சமஷ்டி அரசாக்கும் முயற்கிகளை மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கண்டியில் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 230ஆவது பக்கத்தின் ஊடாக இந்த நாட்டை சமஷ்டி நாடாக்குவோம் என்றும் மதச் சார்பற்ற நாடாக மாற்றுவோம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 230ஆவது பக்கத்தை பார்க்காமலே வாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதி அமரபுர மகாநாயக்க தேரரை சந்தித்த போது தமக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கமைய புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளவாறு அரசியலமைப்பை கொண்டு வருவோம் என்பதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிலுள்ள ஆபத்து தொடர்பில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து நாங்கள் விளக்கி வருகின்றோம். இதன்படி மகாநாயக்க தேரர்களின் தலைமைத்துவத்திலேயே இந்த அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கின்றோம். இதனால் அவர்களின் ஆசிர்வாதத்துடன் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றார்.