அறுகம்பை சம்பவம் பயங்கரவாத செயலல்ல!; கைதான மூவரும் ரி.ஐ.டி.விசாரணையில்
பொத்துவில் அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் சம்பவமானது, பயங்கரவாத செயலாக இதுவரை அவதானிக்கவில்லையெனவும் இஸ்ரேலிய பிரஜைகளை மட்டும் இலக்கு வைத்து நடத்த திட்டமிட்ட சம்பவம் என்பது தொடர் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்கு இஸ்ரேலியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களோ, இலங்கையர்களோ அல்லது வேறு எந்த நாசகார செயலும் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, தாக்குதல் திட்டம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதற்காக பொலிஸார் அவர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெற்றுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்(ரி.ஐ.டி.) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பொத்துவில் பொலிஸ் பகுதியில் பாதுகாப்பை நிலைநிறுத்தியிருந்தோம். பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கூட பாதுகாப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.
அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. ஆனால் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை இல்லை. இலங்கை மீதான தாக்குதலின் தன்மையின்படி, அது பயங்கரவாதச் செயலாக இதுவரை நாம் அவதானிக்கவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, இஸ்ரேலியர்கள் இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எங்கும் ஆபத்துக்களை சந்திக்கலாம். அதனால்தான் இது இலக்கு தாக்குதல் என்று அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வேறு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரை குறிவைப்பதோ அல்லது இலங்கையர்களை குறிவைப்பதோ இதன் இலக்கல்ல.
தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே விசாரிக்கப்பட்டு சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் சரியான தகவல்கள் வெளியானவுடன் அதனை ஊடகங்களுக்கு வழங்க முடியும்.
ஆனால் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.