தேர்தல் களம்

தமிழருக்கு இனப்பிரச்சினை இல்லையென்ற அரசின் அறிவிப்புக்கு ஆதரவாக வடக்கு,கிழக்கில் பல கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள்

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதை கூறியுள்ள நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக செயல்பட்டு வருவதாக வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.யும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடக்கு ,கிழக்கில் இம்முறை போட்டியிடுகின்ற மிக பலமான கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறது.

இத் தேர்தலில் அதிகூடிய பாராளுமன்ற வேட்பாளர்களை கொண்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லுகின்ற ஒரு கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தில் பலமான ஒரு கூட்டணியாக எமது கூட்டணி காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது.தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை ரீதியாகவும்,ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடி உள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை முன் நிறுத்தி நாங்கள் வடக்கு கிழக்கில் எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருந்தோம்.மிகக் குறுகிய காலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் எமக்கு வாக்களித்து உள்ளனர்.அது இந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டிப்பான ஆதரவை தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்.

இந்த தேர்தல் காலத்திலே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இல்லை என்று கூறியுள்ள அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை தவிர ஏனைய கட்சிகள் ,சுயேட்சைக்குழுக்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்ற அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இத் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழ் மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.மக்கள் எங்களுக்கு இரட்டிப்பான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.