தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் 13 ஐ வெளிப்படையாக நிராகரிக்கவில்லை

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13ஆம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தலற்ற ஒரு மௌனத்தொனியே காணப்படுவது குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள தமிழ் சிவில் சமூக அமையமானது குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் சில விடயங்களை வெளிப்படையாகவும் சில விடயங்களை பூடகமாகவும் வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்களான அருட்பணி வீ.யோகேஸ்வரன் மற்றும் பொ.ந.சிங்கம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும்கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது.

இந்நிலையில் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில் ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போல 13ஆம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம்.

எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும் நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப்பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம்.

இத்தகைய பின்னணியில் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும் பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு இவை அரசியற் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது.

தமிழர்களின் சுயநிர்ணய அலகானது அவர்களின் தாயகமானது ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த, சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும்.

குறிப்பாக கல்வி அரச காணி சுகாதாரம் சட்டம் ஒழுங்கு வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும்.

தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

2009இல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும் பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச் சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும் சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும்.

தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.

தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும் விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும் பகிர்ந்து கொண்டவற்றில்ரூபவ் இத்தேர்தல் விஞ்ஞாபனம் சில விடயங்களை வெளிப்படையாகவும் சில விடயங்களைப்

பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதேவேளை தமிழ்ப் பொதுக்கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று நாம் வலுவாக நம்புகின்றோம் விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம் என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button