கனடாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி: முக்கிய பல்கலைக்கழகங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையில் வீழ்ச்சி நிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் அடிப்படையில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் சர்வதேச மாணவர்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற்கொண்டு அந்நாட்டு அரசாங்கம் முக்கிய தீர்மானங்களையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என அந்நாட்டு குடி வரவு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் புதிய கொள்கை காரணமாக சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 35 வீதம் வீழ்ச்சி அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்து இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் எதிர்வு கூறியதை விடவும் மாற்றம் அதிகமானது என கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் எண்ணிக்கை வரையறையானது மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கிருக்கும் முக்கியப் பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, 2017 ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் இரண்டு வீதமாக மட்டுமே தற்காலிகமாக குடியேறியவர்கள் தற்போது 7.5 வீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக தற்காலிக குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.
இதனிடையே, 2022 இல், கனடா 5.5 லட்சம் சர்வதேச மாணவர்களை உள்வாங்கியுள்ளது. இதில் 40 வீதமானவர்கள் இந்திய மாணவர்கள் ஆவர். மேலும் கனடாவில் மாணவர் விசாவில் 3.2 லட்சம் இந்தியர்கள் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.