தமிழ் பொது வேட்பாளர் பின்வாங்க மாட்டார்; விலகுமாறு கூறுவது சுமந்திரனின் தனிப்பட்ட ஆசை
தமிழ் பொத வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக மாட்டார். விலகுமாறு கூறுவது சுமந்திரன் எம்.பி.யின் தனிப்பட்ட ஆசை மட்டுமே என தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்)தலைவரும் யாழ்மாவட்டஎம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 39 ஆவது நினைவுதின நிகழ்வில் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இணைந்த வடக்கு,கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்து அதனை தந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி சிங்களமக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குமென அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அவர் அறிவித்த்துள்ளமை அவர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு முரணாக உள்ளது.
ஏனெனில் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இதுவரை வெளியாக யாகவில்லை அந்த விஞ்ஞாபனத்தில் சமஷ்டித் தீர்வு தொடர்பில் உள்ளடக்கிய விஞ்ஞாபனமே வெளிவர உள்ளது.
ஆனால் சுமந்திரன் சமஷ்டித் தீர்வை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துவிட்டு சமஷ்டி தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாத சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்கினார்?
அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்திருந்தால் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின்னர் யாருக்கு ஆதரவு என குறிப்பிட்டு இருக்கலாம்
சஜித்துக்கு ஆதரவு வழங்கப் போவதான தீர்மானத்தை எடுப்பதற்கு தமிழரசு கட்சிக்கு உரிமை இருந்தாலும் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு கூறுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
ஆகவே தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு சார்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் களம் இறங்கிய நிலையில் எந்த காரணமும் கொண்டும் தேர்தலில் இருந்து விலக மாட்டார் அவருக்கான பூரண ஆதரவை நாம் வழங்குவோம் என்றார்.