ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொது மன்னிப்பு காலம் பிரகடனம்: இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் தங்களுடைய வதிவிட அந்தஸ்தை சட்டப்பூர்வமாக்க அல்லது அபராதம் ஏதுமின்றி நாட்டை வெளியேற அனுமதிக்கும் பொது மன்னிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31ஆம் திகதி இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அபராதம், வெளியேறும் கட்டணம் அல்லது நுழைவுத் தடைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
விசா பொது மன்னிப்பு திட்டத்திற்கு யார் தகுதியானவர்?
விசா பொதுமன்னிப்பு திட்டம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் காலாவதியான வதிவிட விசாக்கள் உட்பட அனைத்து வகை விசாக்களையும் உள்ளடக்கியது.
கூடுதலாக, செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் அல்லது தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி தப்பி ஓடியவர்கள் பொது மன்னிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நபர்கள் பொது மன்னிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது ஆன்லைனிலோ சமர்ப்பிக்கப்படலாம்
தகுதியான நபர்கள் டுபாயில் உள்ள அனைத்து அமர் மையங்களிலும், அல் அவிரில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) மையத்திலும் பொது மன்னிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
அபுதாபியில் அல் தஃப்ரா, சுவைஹான், அல் மக்கா மற்றும் அல் ஷஹாமா மையங்களிலும் பொது மன்னிப்பு சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்டுள்ளபடி, சேவை மையங்கள் காலை 07:00 முதல் 22:00 வரை கூடுதல் நேரத்துடன் செயல்படும், அந்த நேரத்தில் கைரேகை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மையத்திற்குச் செல்லாமல் நாளின் எந்த நேரத்திலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எனினும், கைரேகைக்கான சேவை மையத்தில் தங்களை ஆஜராகும்படி கேட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.