மோடி இன்று உக்ரைன் பயணம்: உற்றுநோக்கும் அமெரிக்கா, ரஷ்யா
‘உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது’ என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.
போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இன்று 23ஆம் திகதி செல்ல உள்ளார்.
இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள ரிச்சர்ட் வர்மா, டில்லியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அவரிடம் பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்,
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இது போரின் சகாப்தம் அல்ல, இது அமைதிக்கான நேரம் என்று பிரதமர் மோடி கூறியது பாராட்டுக்குரியது.
வங்கதேசத்தில் ஜனநாயக செயல்முறைக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்குள்ள மக்களுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை. சமூக ஊடகங்களில் வெளிவரும் அனைத்து தவறான தகவல்களையும் நாங்கள் நம்ப போவதில்லை. ஷேக் ஹசீனாவின் முந்தைய அரசாங்கத்தை சீர்குலைப்பதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் தனது முதல் இருதரப்புப் பயணமாக ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்ததைக் கண்டு சில மேற்கத்தியத் நாடுகள் கோபமடைந்தன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை.
பேச்சுவார்த்தை வாயிலாக மோதலை தீர்க்க அழைப்பு விடுத்து வருகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தப் பயணத்தை உற்று நோக்கியுள்ளன.