மும்பை தாக்குதல் குற்றவாளி: இந்தியாவிடம் ஒப்படையுங்கள் – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008இல், நவம்பர் 26ம் திகதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர்.
பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 பேரைக் கொன்றனர். 300 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012இல் துாக்கிலிடப்பட்டார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தவாஹிர் ராணாவை இந்தியா தேடி வந்தது. இந்நிலையில் அவனை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனர்.
அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில், ‘இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் படி, ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்’ என அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.