சஜித் அணிக்குள் பிளவு; மேலும் பலர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக முரண்பாடுகள், மனக்கசிவுகள் மற்றும் உறுப்பினர்களிடையே காணப்படக்கூடிய கருத்துக்கள் உள்ளிட்ட ஜனாதிபதியின் விசேட பொருளாதார நோக்கம் ஆகியவை காரணமாக சஜித் பிரேமதாசவின் கட்சியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியை பிரநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான 54 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 13 பேர் கட்சியை விட்டு சென்றுள்ளனர்.
அது சுமார் 24 வீதத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
அவ்வாறு விலகி வேறு தரப்பினருக்கு ஆதரவு வழங்கச் சென்ற உறுப்பினர்களிடையே அக்கட்சியின் பிரபல உறுப்பினரான ராஜித சேனாரத்ன, ஏ.எச்.எம். பவுசி, வடிவேல் சுரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அவர்களுக்கு மேலதிகமாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான எம். வேலுகுமார், குமார வெல்கம, அலி சப்ரி ரஹீம், வழக்கறிஞர் எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இஷாக் ரஹ்மான் கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆவார்.
முன்னாள் அமைச்சர்களான ஹரீன் பெர்ணாண்டோ, மனூஷ நாணயக்கார ஆகியோரும் ரணிலுக்கு கீழ் அரசாங்கத்தின் பயணத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதுடன் டயானா கமகேயும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகியுள்ளனர்.
கட்சியின் உள்ளக மோதல்கள் காரணமாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகியுள்ளார்.
ரிஷாட் பதூர்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் ரிஷாட் பதூர்தீன் தவிர ஏனைய மூன்று உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில், ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் அதிலிருந்து நீங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தற்போது கலந்துரையாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.